சொல்லியல் (Etymology) மொழிநூலுள் (Philology)
அடங்குமேனும், பல சொற்கள் பல
மொழிகட்குப் பொதுவாயிருத்தலானும், ஒரு மொழிச் சொல் வெவ்வேறு வகையில் பிற மொழிச்
சென்று வழங்குதலானும், மொழியாராய்ச்சி செய்யாதார் சொல்லாராய்ச்சியில் இறங்குதல் தகாது.
மொழியாராய்ச்சிக்கு மொழி நூலிலக்கியக் கல்வி மட்டுமன்றி பல்வேறு மொழிகளின் இலக்கண
அறிவும் சொற்றொகுதியறிவும் வேண்டும்.
|
பொருட்பாடுநோக்கிச்
சொற்களை,
(1) ஒரு பொருட் பல சொல் (Synonyms)
(2) பல பொருளொரு சொல் (Homonyms)
|
|
என இரு வகையாகப் பகுத்தனர் பண்டைத் தமிழ் இலக்கணியர். இவற்றை, முறையே,
ஒரு பொருட்சொல், பல பொருட் சொல் எனக் குறுக்கியும் வழங்கலாம். ஒரு பொருட் சொல் என்பது
ஒரேயொரு பொருளுள்ள சொல் என்றும் பொருள்படினும் ஒரு பொருட் பலசொல் என்பது ஒருமைக்கு ஏற்காமை
யானும், இரட்டுறற் சொற்கள் பல இடம்நோக்கிப் பொருள் வேறுபாடுணர்த்தலானும், ஒரு பொருட்சொல்
என்னும் குறியீட்டிற்கு இரட்டுறன்மை இழுக்காகாதென்க.
|
இனி,
பல பொருட் சொல்லும்,
(1) ஒரு வேர்ப் பல பொருட்சொல் (Homonymy)
(2) பல வேர்ப் பல பொருட்சொல் (Polysemy)
|
|
என இரு திறப்படும். கடு என்னும் சொல், மிகுதி, வன்மை, வலி, விரைவு,
காரம், கொடுமை முதலிய பல பொருளை ஒரே வேர்ப் பொருளடியில் உணர்த்துதலால் ஒரு வேர்ப் பல
பொருட் சொல்லும்; மாண்டான் என்னும் சொல், மாண், மாள் என்னும் இரு வேறு வினைப்பகுதிகளின்
படர்க்கை ஆண்பால் இறந்தகால முற்றாதலின் பல வேர்ப் பல பொருட் சொல்லும்; ஆகும்.
ஒரு பொருட் சொல்லும் இங்ஙனமே ஒரு வேருடைமையும் பல வேருடைமையும்பற்றி
இரு திறப்படும். ஆயின், அது இக் கட்டுரைக்குப் பயன்படாமையின் விளக்கப்பட்டிலது.
|