பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 69
69

உகரச்சொல் முதலாவது முன்மைக் கருத்தையும், பின்பு அதன் வழியாகப் பின்மை, உயர்ச்சி, ஒப்புமை ஆகிய கருத்துகளையும் கொண்டுள்ளது.

ஒப்புமைக் கருத்தில் உகரச் சொல் உ - ஒ - ஓ என மோனைத் திரிபடையும். ஒத்தல் போலுதல், ஓவியம் = ஒப்புமை பற்றிய வரைவுக்கலை. ஒ + தல் = ஒத்தல். ஓ + இயம் = ஓவியம். ஒகரவடி பல மெய்களொடுஞ் சேர்ந்து பல ஒப்புமை அல்லது பொருந்தற் கருத்துச் சொற்களை உண்டுபண்ணும். ஒக்கல், ஒச்சை, ஒட்டு, ஒண்டு, ஒண்ணு, ஒத்து, ஒப்பு, ஒம்பு, ஒல்லு, ஒவ்வு, ஒற்று, ஒன்று, ஒன்னு ஆகிய சொற்களை நோக்குக.

மொழி வளர்ச்சியில், சொற்கள் பல்குதற் பொருட்டு அறுவகைச் செய்யுள் திரிபுகளும் மூவகைப் புணர்ச்சி வேறுபாடுகளும் முக்குறைகளும், முச்சேர்க்கைகளும் முன்னோரால் கையாளப்பெற்றுள்ளன. முச்சேர்க்கையாவன. முதற் சேர்க்கை இடைச் சேர்க்கை, கடைச் சேர்க்கை என்பன.

 
ஒப்புமைக் கருத்துள்ள உகரச் சொல் கடைச் சேர்க்கையாக லகரமெய் பெற்றுப் பல்வேறு திரிபடைந்து பற்பல சொற்களைப் பிறப்பிக்கும்.

உல் - உள் - உடு - உடன்

உடு - ஒடு - ஓடு

ஓடுதல் = ஒத்தல், பொருந்துதல், கூடுதல். ஓட என்பது ஓர் உவம உருபு.

"ஓடப் புரைய என்றவை எனாஅ" என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க. (1232)

ஓடாவி = ஓவியன். ஓடு - ஓட்டம் - ஆட்டம் = ஒப்பு.

குரங்காட்டம் ஓடுகிறான் என்னும் வழக்கை நோக்குக.

ஓட்டை - உடன், ஒத்த.

உல் - உர் - உறு - உறழ்

உர் - உரி - உரிஞ் - உரிஞ்சு

உர் - உர - உரை - உராய்.

''உல்'' அடியின் அள்ளைத் திரிபு

உல் - அல். அல்லுதல் - பொருந்துதல், பின்னுதல், முடைதல்.

அல் - அள் - அளை

அள் - அண் - அணவு, அணை

அள் - அட்டு - அச்சு (ஒத்த பொருளமைக்குங் கருவி)

அண் - அண்டு

அத்து, அம் முதலிய சொற்களும் ''அள்'' அடியினின்று அமைந்தவையே, அத்துதல் - ஒட்டுதல், இணைத்தல். அம் - அமர். அமர்தல் - ஒத்தல், பொருந்துதல்.