பக்கம் எண் :

Mozhinool Katturaigal Page - 71
71

''மம்'' ஒரு தொழிற் பெயரீறு என்பது, உருமம், பருமம், முதலிய சொற்களால் உணரலாம். உருத்தல், வெப்பமாதல், உருமம், வெப்பமான நண்பகல்.

"மம்" ஈறு "மை" யீற்றுத் திரிபெனக் கொள்ள இடமுண்டு.

ஒ.நோ : செய்யாமை - செய்யாமல்.

செய்யாமை போனான், செய்யாமே போனான், செய்யாமற்போனான், என்னும் முத் தொடரும் ஒரு பொருளனவாதல் காண்க.

  மன்னுதிரு வண்ணா மலைச்சம்பந் தாண்டாற்குப்
பன்னுதலைச் சவரம் பண்ணுவதேன் - மின்னின்
இளைத்தவிடை மாதர் இவன்குடுமி பற்றி
வளைத்திழுத்துக் குட்டா மலுக்கு

என்னும் காளமேகர் பாடலில், குட்டாமல் என்பது குட்டாமலுக்கு என்று உருபேற்று வருவதால் ''செய்யாமல்'' என்னும் வாய்பாட்டு எதிர்மறை வினையெச்ச வடிவம், வினை எச்சமாய் ஆளப்படும். செய்யாமை என்னும் எதிர்மறைத் தொழிற்பெயரின் திரிபாயிருக்கலாம் என்று உய்த்துணரப் பெறும்.

அஃறிணைப் பெயர்களின் மகரவிறுதி னகரவிறுதியாவது பெரும்பான்மையாதலால் உவமம் என்னும் பெயர் உவமன் என்று திரியும்.

  ஒ. நோ : பருமம் - பருமன் }  
          தொழிற் பெயர்
    தடுமம் - தடுமன  
             
    திறம் - திறன் }  
        பிற பெயர்
  கடம் - கடன்  

விழுமம் என்னும் தொழிற்பெயர் விழு + மம் என்றும், விழுமு + அம் என்றும் பிரித்தற்கு இடந்தரும். ஆயின் உருமம், பருமம் என்பன இடந்தரா, விழுத்தல் = சிறத்தல், விழுமுதல் = சிறத்தல்.

மானம் என்னும் சொல் தொழிற்பெயரீறாய் வருவதை, அடைமானம், கட்டுமானம், தீர்மானம், படிமானம், பிடிமானம், பெறுமானம், வருமானம் முதலிய தொழிற்பெயர்களின்று அறிக.

உவமை என்னும் பெயரினின்று உவமித்தல் என்னும் வினை பிறக்கும். ஒருமை என்னும் பெயரினின்று ஒருமி-த்தல் என்னும் வினை பிறந்திருத்தல் காண்க. உவமித்தல், ஒன்றனை ஒன்றிற்கு ஒப்பாகக் கூறுதல்.

இங்ஙனமே, உவமானம் என்னும் பெயரினின்று உவமானி-த்தல் என்னும் வினை பிறக்கும். தீர்மானம் என்னும் பெயரினின்று தீர்மானி-த்தல் என்னும் வினை பிறந்திருத்தல் காண்க. தீர்மானம், முடிபு. தீர்மானித்தல் முடிபு செய்தல். உவமானித்தல், உவமித்தல்.

உவப்பு என்னும் சொல் முற்கூறியவாறு உயர்ச்சிப் பொருளையுந் தரும்.