|
தமிழ் மொழி வரலாறு 10
பொழுது நாம் கடைப்பிடிக்க வேண்டிய
எச்சரிக்கைகளைப் பற்றி முன்னர்க்
குறிப்பிட்டோம். அவற்றையும் இங்குக் கருத்திற் கொள்ள வேண்டும்.
3. 6. 1 எச்சரிக்கைகள்
சில சமயங்களில் கல்வெட்டுக்களில்
அவற்றை எழுதியோரின் நடையை மட்டுமே காண்கிறோம். அல்லது அக்காலத்தில் பொது ஆவணங்களில்
செல்வாக்குடன் விளங்கிய நடையையே காண்கிறோம். அக்காலத்திய பேச்சு மொழியில் அல்லது செய்யுளில்
இடம் பெற்ற பிற மொழிச் சொற்கள் இக்கல்வெட்டுக்களிலும் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.
இப்போது ஆவணங்களில் சட்டத் தொடர்பான பழைய மரபுத் தொடர்களும் பழங்கலைச் சொற்களும்
காப்பாற்றப்பட்டுள்ளன. எனவே இவற்றின் காலத்தை அவை காணப்படும் கல்வெட்டுக்களின் காலத்தவைதான்
என மதிக்கக்கூடிய ஆபத்தும் உள்ளது. மேலும் இந்த ஆவணங்கள் சிலவற்றின் காலத்தை முடிவு செய்வதும்
கடினமானது. பல செப்பேடுகள் போலியானவை என ஆராய்ந்து தள்ளப்பட்டுள்ளன. மேலும் ஆவணங்களின்
உண்மைத் தன்மையை முடிவு செய்வதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆவணங்களை எழுதியோர் செய்த
தவறுகளையும் கருத்திற் கொள்ள வேண்டும். இத்தவறுகள் வெறும் கையெழுத்துப் பிழையன்றெனின்
அவையும் நமது ஆராய்ச்சிக்கு முக்கியமானவையே ஆகும்.
பழந்தமிழ் நூல்களில்
ஓலைச் சுவடிகளை வரலாற்றுப் பதிவேடுகளாகவும் ஆவணங்களாகவும் கருதலாம். ஓலைச் சுவடி எழுதுவோர்
அனைவரும் கற்றவர் அல்லர். எனவே அவர்கள் பேசிய முறையிலேயே எழுத விழைந்தனர். இவர்கள் செய்த
பெரும் எழுத்துப் பிழைகள் கூட, அக்காலத்தின் மொழி நிலையை அறிய உதவக் கூடும். திருநெல்வேலியைச்
சேர்ந்த ஒருவர் ளகர மெய்யையும் ழகர மெய்யையும் வேறுபாடின்றி எழுதுவார் ஆயின், அது அவ்விரு
ஒலிகளும் அக்கிளை மொழியில் ஒன்றாகவே கருதப்படுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டுவதாகும்.
இந்நோக்கில் பார்க்கையில் நமது காலத்திய, அதற்கு முந்திய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்கள்
எழுதிய கட்டுரைகள் கூட நம் ஆராய்ச்சிக்கு முக்கியமானவைகளே ஆகும்.
|