|
தமிழ் மொழி வரலாறு 9
அகராதிகள் இவ்வகையில்
அருஞ்சாதனைகளேயாகும். கிறித்துவ மதப்போதகர்கள் இதற்குப் பின்னர் பல அகராதிகளைத்
தயாரித்துள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தமிழ்ச் சொற்களஞ்சியம் (
Tamil
Lexicon) இலக்கியப் பேச்சு, கிளைமொழி வழக்குகளைத்
தருகிறது. இது தனித்தன்மையும், மிகுந்த பயனுள்ளதுமாகும்.
பர்ரோ, எமனோ
ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளபடி, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சொற்களஞ்சியமும்
தமிழ்மொழியின் ஒட்டுமொத்தமான மொழிநூல் ஆவணமன்று.13
இந்நூல் எழுதப் படுகையில் பல தமிழ்நூல்களின் காலம் முடிவு செய்யப்படாமல் இருந்தமையால்
இந்நூல் வரலாற்று நெறியில் தயாரிக்கப்படவில்லை என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டும்.
3. 6 கல்வெட்டுக்கள்
தமிழ்மொழி வரலாற்று
ஆராய்ச்சிக்கு உதவும் அடுத்ததொரு அடிப்படைச் சான்று கல்வெட்டுக்களாகும். தமிழகத்தின்
தென் மாவட்டங்களிலுள்ள குகைகளில் பிராமி வரிவடிவத்தில் எழுதப்பட்ட சிறிய
கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன. இவை பிராமி வரிவடிவத்தின் தெற்கத்திய முறையில்
எழுதப்பட்டவையாகும். கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தொல் எழுத்தியல்
(
Paleography) ஆராய்ச்சி அடிப்படையில் இவற்றின் காலத்தைக் கிறிஸ்துவுக்கு முந்திய மூன்றாம் இரண்டாம்
நூற்றாண்டுகள் என மதிப்பிடுகின்றனர். அடுத்த சில நூற்றாண்டுகளைச் சேர்ந்த மிகச்சில
கல்வெட்டுக்கள் நீங்கலாக கி. பி. ஏழாம் நூற்றாண்டின் வரை கல்வெட்டுக்களின்
வரலாற்றில் நீண்டதொரு இடைவெளி காணப்படுகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து
தற்காலம்வரை ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் உரிய ஏராளமான கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவை
தவிர செப்பேடுகளும், அரசினர் மற்றும் தனியார் ஆவணங்களும் நமக்குக் கிடைத்துள்ளன.
இவற்றிலெல்லாம், அவ்வக் காலத்தைச் சேர்ந்த பேச்சு மொழி வழக்குகள் மிகுந்துள்ளதைக்
காணலாம்.
பிற்காலத்திய
கல்வெட்டுக்களில் செய்யுட் பகுதிகள் காணப்படுகின்றன. இலக்கிய அடிப்படைச் சான்றுகளைப்
பயன்படுத்தும்
|
13.
T. Burrow and
M. B. Emeneau :
A Dravidian Etymological Dictionary, p xviii.
|
|