பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

108

சாரியைகள் ஒட்டுக்களேயாகும். அவை சொற்களிலும் தொகைகளிலும் இடையில் வருகின்றன. அதிலும் குறிப்பாகப் பெயர்கள் வேற்றுமை உருபுகளை ஏற்கும் பொழுதோ அல்லது கட்டாயமாக வேற்றுமை உருபுகளை ஏற்கவேண்டிய இடத்திலேயோ பெரும்பாலும் சாரியைகள் வருகின்றன தொல்காப்பியரின் கருத்துப்படி பொருளைப் புரிந்து கொள்ள (ஒருவேளை வேற்றுமை உருபுகளின் பொருளைப் புரிந்து கொள்ள) சாரியைகள் உதவுகின்றன.11சொற்களின் இறுதியில் வரும் ஒட்டுக்களாக இருந்திருக்கக் கூடிய சாரியைகள் தொகைகளில் மட்டும் நிலைத்திருக்க வேண்டும் அல்லது கால்டுவெல் விளக்குவது போல அவை பழைய வேற்றுமை உருபுகளாய் இருந்திருக்க வேண்டும்.12 தொடர்ச்சியான வழக்காற்றின் பயனாகத் தமிழில் இடைச்சொற்கள் ஆற்றலிழக்கும் போக்கு உள்ளது; பின்னர் அவை வேறு புதிய இடைச்சொற்களால் வலுவேற்றப்படும். இதன் விளைவாக “இரட்டை விகுதிகள்” தோன்றுகின்றன. இந்நிலையில் மிகையாகிவிட்ட பழைய இடைச்சொல் சாரியை என்றழைக்கப்படுகிறது. சார் + இயை > சாரியை; “சார்” என்பது “சார்தல்” அல்லது “சார்ந்திருத்தல்” எனப் பொருள்படும். “இயை” என்பது “சேருதல்” அல்லது “சேர்த்தல்” எனப் பொருள்படும். எனவே “சாரியை” என்பது ‘தன்னோடு சேர்ந்து வருவதைச் சார்ந்து நிற்பது’ எனப் பொருள்படும்.

1. 3 பெயர், வினை ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகள்

வெறும் உருபனாக மட்டும் இல்லாத சொற்களைத் தொல்காப்பியர் பெயர் என்றும் வினை என்றும் பகுக்கிறார்.13


11. தொல்காப்பியம் 132

  “பெயரும் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப
வேற்றுமை உருபு நிலைபெறு வழியும்
தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும்
ஒட்டுதற் கொழுகிய வழக்கொடு சிவணிச்
சொற்சிதர் மருங்கின் வழிவந்து விளங்காது
இடைநின் றியலும் சாரியை இயற்கை
உடைமையும் இன்மையும் ஒடுவயின் ஒக்கும்”.

12. R. Caldwell :

A Comparative Grammar of the Dravidian Languages, p 259.

13. தொல்காப்பியம், 643

 

“சொல்லெனப் படுப பெயரே வினை என்று
ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே”.