பக்கம் எண் :

New Page 1
 

தமிழ் மொழி வரலாறு

119

தொல்காப்பியர் சில பயனிலைகளைப் பெயர்ச்சொற்கள் என்றழைக்கிறார்.29 தொல்காப்பியத்தில் ‘குறிப்பு’ என அழைக்கப்பெறும் காலக் கருத்துடைய வினைமுற்றுக்கள் சிலவும் உள்ளன. ஆக்கப் பெயர்களுக்கும் குறிப்பு’ வினைகட்குமிடையே உள்ள வேறுபாட்டினைப் பின்வருமாறு சுட்டலாம். ஆக்கப்பெயர்களில் திணை பால் விகுதிகள் நேரடியாக வேர்ச்சொல்லுடனோ தொழிற் பெயர் வடிவத்துடனோ சேர்க்கப் பெறுகின்றன. குறிப்பு வினைகளில் இவ்விகுதிகள் பெயரெச்ச வடிவங்களோடு சேர்க்கப் பெறுகின்றன.

2. 2 வினைமுற்றுக்கள்

சான்று : நல் + அள் >நல்லள் (பெயர்)
நல்ல + அள் > நல்லாள் (குறிப்புவினை)

இவற்றுள் வகர உடம்படுமெய் இடம்பெற ‘நல்லவள்’ என்ற வடிவம் வந்தது. ‘அவள்’ என்னும் விகுதி ஒள் என வரும் பழைய வடிவம் ஒன்று உண்டு. சான்று : ‘நல்லோள்’.30 வகரஉடம்படு மெய்யுடன் கூடிய வடிவமும் வழக்கிலிருந்தது. சான்று : ‘வழிபட்டவள்’.31 ஆனால் இவ்வடிவம் உயர்திணைத் தொடர்பாக ஓரிடத்தில் மட்டுமே வருகிறது. ‘ஓன்’, ‘ஓள்’, ‘ஓர்’ என்பன மிகுதியாக இங்ஙனம் வருகின்றன. வினைமுற்றானது எழுவாயாகவோ அல்லது உருபேற்றோ வருமிடங்களில் வகர உடம்படுமெய் வருவது கல்லாடரால் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.32 இது தொல்காப்பியரால் ‘தொழிற் பெயர்’ எனவும்33 நன்னூலாரால் ‘வினையாலணையும் பெயர்’ எனவும்34 அழைக்கப்படுகிறது.


29. தொல்காப்பியம், 550

 

“பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல்
வினைநிலை உரைத்தல் வினாவிற்கு ஏற்றல்
பண்புகொள வருதல் பெயர்கொள வருதல் என்று
அன்றி அனைத்தும் பெயர்ப்பய னிலையே”.

30. தொல்காப்பியம், 1025.
31. தொல்காப்பியம், 1179.
32. 71 ஆவது நூற்பா (ஏட்டுச்சுவடி).
33. தொல்காப்பியம், 624

 

“தொழிற்பெய ராயின் ஓகாரம் வருதலும்
வழுக்கின்று என்மனார் வயங்கியோரே”.

34. நன்னூல், 286

 

“வினையின் பெயரே படர்க்கை வினையா
லணையும் பெயரே யாண்டு மாகும்”.