பக்கம் எண் :

New Page 2
 

தமிழ் மொழி வரலாறு

136

போலவே விளக்கலாம். ‘குன்றம்’ என்பது ‘குன்று’ எனவும் வழங்குகின்றது. இவை இரண்டும் தனித்து (Free forms) வழங்குகின்றன. தனித்து வழங்கும் வடிவங்களில் ‘அம்’ என்பதைச் சாரியையாகக் கொள்வதற்குப் பதிலாக (இதனை விளக்குவது கடினம்) தொடக்கத்தில் காணப்பெற்ற ஈறு பின்னர் மறைந்தது எனக் கொள்ளலாம். இதைப் போலவே ‘பான்’ என்பதில் வரும் ‘அன்’ என்பதை, பழைய மாற்று வடிவமாகக் கொள்ளலாம். இங்கு துகரத்திற்குப் பதில் -த்த்- வருகிறது. ‘இன்’ என்பதற்கும் இவ்விளக்கம் பொருந்தும். இவ்வாறாக சாரியைகள் பலவற்றைத் தொகைகளின் முதற்சொற்களின் பழைய ஈறுகளாகக் கருதலாம். ‘கெழு, தம், நம், நும்’ முதலியன முழுச்சொற்களேயாகும். அவை பழைய இயல்பை இழந்து சாரியையாக வழங்குகின்றன. அகரச் சாரியை என்பது ‘அம்’ என்பதன் மாற்று வடிவமாகும். வெடிப்பொலிகளுக்குப் பின்னர் கட்டாயமாயும் பிறமெய்களுக்குப் பின்னர் அவ்வாறன்றியும் உகரம் வரும்; உகர இசைநிறைக்க வந்த உயிரேயன்றி உண்மையில் சாரியையன்று. ஏகாரத்திற்கு ‘உம்’ (and என்ற) மைப் பொருளும் உண்டு.

சான்று : ஒன்றேகால்

இ. தொகையே; உருபுதொகுதலன்று

வேற்றுமைத் தொகைகள் எனக் குறிப்பிடப்பட்டவை அடைத்தொடர்களின் கீழ் வருகின்றன. சேனாவரையர் விளக்குவது போல இத்தொகைகள் வேற்றுமையுருபுகள் தொகுதலைச் சுட்டிக் காட்டவில்லை.62 தொகைகளின் சிறப்புப் பொருளைக் குறிக்கப் பின்னர் வேற்றுமையுருபுகள் வெளித்தோன்றுகின்றன. ‘ஒருமைப் பாடு’ (synthesis) என்பதிலிருந்து ‘பாகுபாடு’ (analysis) என்பதை நோக்கிய மாற்றம் என இதை விளக்கலாம். மொழி வளர்ச்சியுறுவதற்குரிய ஒரே வழி இது என்றோ அல்லது இம்முறை எப்பொழுதும் வளர்ச்சியையே குறிப்பிடுகிறதென்றோ ஜெஸ்பெர்சன் கொள்வது போல இங்குக் கொள்ளவில்லை.63 வேற்றுமைத் தொடர்களில் வரும் இடைச்சொற்களின் மிகுந்து வழங்கும் வடிவங்கள் பின்னர் பல்வேறு வேற்றுமை உருபுகளாக வளர்ச்சியுற்றன.
 


62. தொல்காப்பியம், 896 ஆவது நூற்பா, சேனாவரையர் உரை.
63. Jesperson :
    
Language, p 334.