பக்கம் எண் :

New Page 4
 

தமிழ் மொழி வரலாறு

138

முக்கியமாக உணர்த்தவே இங்ஙனம் அவர் செய்கிறார். ஆறாம், ஏழாம் வேற்றுமைகளே அடைத் தொடர்களின் பழைய பொருள்கள் எனக் கால்டுவெல் விளக்குகிறார்.

4. 1 ஆறாம் வேற்றுமை அ ~ அது ~ இன்

பழைய விகுதியான ‘அன் ~ அ’ என்பது ஆறாம் வேற்றுமையைக் குறித்துப் பின்னர்ப் பெயரெச்சத்தைக் குறிக்கப்பயன்படலாயிற்று. ஆனால் இந்த அகரமானது ஆறாம் வேற்றுமை உருபாகப் பிற்காலத்தில் ஒப்புக் கொள்ளப்படவில்லை. அப்பொருளை வலியுறுத்த ‘கு’ எனும் விகுதி சேர்க்கப் பெற்றது. பழைய வடிவமான ‘என’ என்பதையும் ‘எனக்குமகன்’ என்ற பிற்காலத்திய வழக்கையும் நோக்குக. இங்கு ‘அக்கு’ என்பது உண்மையில் ‘அ + கு’ என்பதேயாகும். இரட்டை வேற்றுமை உருபுகளுக்கு இது ஒரு சான்றாகும். பலவின்பால் விகுதியான அகரமும் இந்த அகரமும் ஒன்றென மயக்கம் ஏற்பட்டது. பின்னர் ஒப்புமையாக்கமாக அஃறிணை ஒருமையான ‘அது’ என்பது ஆறாம் வேற்றுமை உருபாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது துகரத்தில் முடியும் பழைய சொல் வடிவங்களின் விளைவாகும். சான்று : தொகைகளின் முதல் உறுப்பாக வரும் *மரபு. அஃறிணை விகுதிகள் பற்றிய மயக்கத்தின் விளைவாக அகர உருபைத் தொடர்ந்து பலவின்பால் சொற்கள் வரவேண்டும் என்றும், ‘அது’ உருபை அடுத்து ஒன்றன்பாற் சொற்கள் வரவேண்டும் என்றும் மரபேற்பட்டது. ஆனால் தொல்காப்பியர் இவ்வாறு குறிப்பிட்டுக் கூறவில்லை. உயர் திணையைக் குறிக்கும் சொல் தொடரும் பொழுது குகரமே ஆறாம் வேற்றுமை உருபாக இருக்க வேண்டும் என அவர் கூறுவதிலிருந்து முன்னர்க் கூறப்பட்ட கருத்தே அவர் மனத்தில் இருந்திருக்க வேண்டும் என முடிவு கூறலாம். ‘அது’ என்பதை அஃறிணை விகுதியுடன் சேர்த்து மயங்கியதின் விளைவாக ‘அது’ என்னும் ஆறாம் வேற்றுமை உருபு பெற்ற ‘அவனது’ போன்ற சொற்களுடன் மீண்டும் வேற்றுமை உருபைச் சேர்க்கவேண்டும் எனக்கருதப்பட்டது. சான்று : ‘அவனதை’. தொல்காப்பியத்திலேயே இதற்குச் சான்று காட்டலாம். சிவஞான சுவாமிகள் விளக்குவது போல , ‘அது’ என்பதில் முடிந்து பிறவேற்றுமை உருபுகளை ஏற்கும் சொற்கள் உண்மையில் அஃறிணைச் சொற்களே ஆகும். அவை ஆறாம் வேற்றுமை ஆகமாட்டா. இந்த அகரமானது உயர்திணைச் சொற்களிலும் வருகிறது; ஆனால்