தமிழ் மொழி வரலாறு
139
இவற்றைப் பழமையைப்
போற்றும் இலக்கண ஆசிரியர்கள் பெயரெச்சங்கள் என விளக்கிவிடுவர். ‘அது’ என்பது சங்க
இலக்கியத்தில் மிகவும் அருகியே காணப்படுகின்றது. தொல்காப்பியர் எழுத்ததிகாரத்திலும்
சொல்லதிகாரத்திலும் இதைப் பயன்படுத்தவில்லை. பொருளதிகாரத்தில் மட்டும் இது
பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பொருளதிகாரம் மற்ற இரண்டு அதிகாரங்களைப் போலப்
பழமையானதாக இல்லாமல் இருக்கக்கூடும்.
4. 2. கு
நான்காம் வேற்றுமை
உருபான குகரம் வடக்கு போன்ற திசையைக் காட்டும் சொற்களிலிருந்து பிரிக்கப்பட்டு வேற்றுமை
உருபாக வளர்ச்சியுற்றிருக்கலாம். குகரம் ஆறாம் வேற்றுமைப் பொருளும் ஏழாம் வேற்றுமைப்
பொருளும் உடையது. இவற்றிலிருந்து மற்றைய பொருள்களும் வளர்ச்சியுற்றன. குகரத்தைத்
தொடர்ந்து உயர்திணை வரும்பொழுது, அது இன்றுகூட ஆறாம் வேற்றுமைக்குரிய பொருளைத் தருகிறது.
சான்று : ‘எனக்கு மகன்’. தொல்காப்பியர் இதைக் குறித்துள்ளார்.
ஆனால் ‘வடக்கு’
முதலான திசைச் சொற்களில் உள்ளது போல, குகர விகுதிக்கு ஏழாம் வேற்றுமைப் பொருளும்
இருப்பதைக் குறிப்பிடவேண்டும். ‘நாளைக்கு’, ‘வருகிற ஆண்டுக்குப் பார்த்துக் கொள்ளலாம்’,
‘ஆடிக்கு ஆடி’ போன்ற காலம் குறித்து வரும் சொற்களில் குகரம் உள்ளது. தொல்காப்பியர்
காலத்தில் பழையமரபுத் தொடரொன்றில் இவ்வழக்கு விளங்கக் காணலாம். ‘ஆடிக்குக்
கொண்டான்’ என்பது அத்தொடராகும். தொல்காப்பியர் காலத்தில் குகரம், நான்காம்
வேற்றுமை உருபாகி விட்டதால், அவர் இத்தொடரில் உள்ள குகரத்தைச் சாரியை என்று
விளக்குகிறார். சங்க இலக்கியங்களிலும் இவ்வழக்கு உண்டு. இது காலங்காட்டும் சொற்களோடு
மட்டும் அடங்குவதில்லை. ‘நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற முளை’ என்பதில் குகரம் உறுதியாக
ஏழாம் வேற்றுமைப் பொருளையே தருகிறது எனலாம். ஏழாம் வேற்றுமை உருபான ‘இல்’ வருவதற்குப்
பதிலாக, வேறு வேற்றுமை உருபான குகரம் மாறி வருகிறது என இலக்கண ஆசிரியர்கள் இதை
விளக்குவர். இங்ஙனம் வேற்றுமை உருபுகள் பல மாறுபட்ட பொருள்களில் வரும் தன்மை ‘வேற்றுமை
மயக்கம்’ என்றழைக்கப்படுகிறது. இது காலம் செல்லச் செல்ல வெவ்வேறு இடைச் சொற்களும்
வேற்றுமை
|