பக்கம் எண் :

கள
 

தமிழ் மொழி வரலாறு

14

சமஸ்கிருத சுலோகங்களில் அம்மொழி வரி வடிவத்திலேயே தமிழ்ச் சொற்கள் இடம் பெற்றுள்ளன என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

இவற்றைத் தவிர இந்நாட்டிற்கு வந்த வெளிநாட்டவர் இங்குள்ள நகரங்களையும் துறைமுகங்களையும் ஏற்றுமதிப் பொருட்களையும் பற்றிக் குறிப்பிட்டு உள்ளனர். மெகஸ்தனீஸ் ( Megasthenes), பெரி புளுஸின் ஆசிரியர் ( the author of the Periplus) ப்ளினி ( Pliny), தாலமி ( Ptolemy) போன்றோர் இத்தகைய செய்திகளைத் தருகின்றனர். சீன யாத்திரிகர் யுவான் சுவாங் ( Hieun Tsang) இவ்வகையில் முக்கியமானவர். மேலை நாடுகளிலிருந்து வந்த மார்கோபோலோவும் ( Marcopolo) பிற யாத்திரிகர்களும் நமது ஆராய்ச்சி நோக்கில் முக்கியமானவர்கள். கிறிஸ்துவச் சமயப் போதகர்கள் தம் நாட்டிற்கு அனுப்பிய கடிதங்களை இந்நோக்கோடு ஆராய்வது பெரும் பயன் தருவதாகும். அரசுப் பதிவேடுகளிலும், விதிமுறைகளிலும், ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள தமிழ்ப் பெயர்களும், மேலைநாட்டு மொழிகளின் அகராதிகளில் புகுந்து விட்ட தமிழ்ச் சொற்களும் ஆராய்வதற்கு உரியன ஆகும்.

பிற மொழி வரிவடிவங்களில் எழுதப்பட்ட சொற்கள் அம் மொழிகளின் இயல்புகளுக்கு ஏற்ப மாற்றி எழுதப்பட்ட சொற்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்துக் கூறமுடியாது. காலத்துக்குக் காலம் மாறிய உச்சரிப்பு மாற்றங்களை எல்லாம் புரிந்து கொள்ள இலக்கியங்களும், பிற தமிழ் நூல்களும் உதவமாட்டா. பிற மொழி மூலங்கள் எல்லாம் தமிழ்ச் சொற்கள் பிற மொழியாளர்களால் எவ்வாறு கேட்கப்பட்டன என்ற செய்தியைத் தருகின்றன. தங்களது தாய்மொழியின் ஒலியன் அமைப்புக்கு இயைய தமிழ் ஒலிகளைப் பிறமொழியாளர் கேட்டிருக்கக் கூடும் என்ற உண்மையை, இவ் அடிப்படைச் சான்றுகளைப் பயன்படுத்தும் பொழுது கருத்திற் கொள்ள வேண்டும்.

பிறமொழிச் சொற்களைத் தமிழில் ஏற்றுப் பயன்படுத்தியிருப்பதும் நம் ஆய்வுக்குரியதாகும். கடன் தரும் மொழியின் ஒலியன் அமைப்புக்கு இணையான கடன் வாங்கும் மொழியில் உள்ள ஒலியன் அமைப்பை அவை தருகின்றன. ஆனால் எந்த ஒலியன் தொடர் அந்நிய மொழி ஒன்றின் ஒலியன் தொடருக்கு நெருங்கியது என்பதைக் கணிப்பது இயலாது. கடன் வாங்கப்பட்ட சொற்களின் ஒலியன் அமைப்பைக் கொண்டே நெருங்கிய உறவுடைய ஒலியன் பற்றிய முடிவுக்கு வரவேண்டும்.