பக்கம் எண் :

1
 

தமிழ் மொழி வரலாறு

143

1) பொன் + இலன் > பொன்னிலன்
2) ஊர் + சேர்ந்தான் > ஊர் சேர்ந்தான்
அல்லது நிலம் + கடந்தான் > நிலங்கடந்தான்.

இங்கு நிலம் என்ற பெயர்ச் சொல்லானது, முழுச்சொல்லுடன் சேராமல், கட என்ற வேருடன் சேர்ந்து தொகையாகிறது; நிலங்கட என்னும் இவ்வேர்த்தொகை பின்னர் கால இடைநிலை, விகுதி முதலியன சேர்க்கப்பெற்று வினைமுற்றாக ஆக்கப்படுகிறது.

‘நிலங்கடந்தான்’ என்பது தொகையே எனச் சேனாவரையர் மேற்கொண்டுள்ள நிலையை, இது சிறப்பாக விளக்கக் கூடும். உயர்திணையைப் பொறுத்த வரையிலும்கூட இவ்வேற்றுமை உருபைத் தவிர்க்கலாம். அஃதாவது இரண்டாவது சொல்லின் மொழி முதல் வெடிப்பொலி இரட்டித்தலாலே சொற்கள் ஒரு சொல் நீர்மைப்படுதலைக் குறிக்குமாயின் இந்த உருபைத் தவிர்க்கலாம். சான்று: அவர் + பிரியேன் > அவரைப் பிரியேன் (என்பதற்குப் பதிலாக) அவர்ப் பிரியேன் என ஆதல்.

உயர்திணையுடன் இரண்டாம் வேற்றுமை உருபைச் சேர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது; இல்லையெனில் அதை எழுவாய் என்று தவறாகக் கொள்ள நேரிடும். ‘மரம்’ என்பது போன்ற சொற்களிலுள்ள பழைய அஃறிணை விகுதியான ‘அம்’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபாயிற்று. பழங் கன்னடத்தில் ‘அம்’ என்பது இரண்டாம் வேற்றுமை உருபாகும். தமிழில் மொழி இறுதியில் ‘அம்’ என்பது ‘ஐ’ ஆகிறது. [மொழி இடையில் ‘அம் > ஐ’ மாற்றத்திற்குச் சான்றாக ‘பனங்காய்’, ‘பனை’ என்பவற்றை நோக்குக.] இந்த ‘ஐ’ இரண்டாம் வேற்றுமை உருபாகிறது. சான்றாகக் ‘காவலோனக் களிறு அஞ்சுமே’ என்பதை நோக்குக. இங்கு ‘காவலோனம்’ என்பதே பழைய வடிவமாகும். ‘களிறு’ என்பதோடு அது தொகையாகும் பொழுது ‘காவலோனக் களிறு’ என்றாகிறது. மகர ஈறு இழப்புற்றுத் தொடர்ந்து வரும் வெடிப்பொலி இரட்டிக்கும் என்ற விதிப்படி (மரம் + கிளை > மரக்கிளை) இது இங்ஙனமாயிற்று. ‘ஐ’ உருபு அகரமாவதைத் தொல்காப்பியரே குறித்துள்ளார். அகரத்துடன் கூடிய இவ்வடிவம் பயனிலையுடன் தொகையாவதை வெடிப்பொலி இரட்டித்தலால் அறியலாம். பெயரும் வினையும் தனித்து வளர்ந்த பொழுது ‘ஐ’ தனி வேற்றுமை உருபாக வளர்ச்சியுற்றது.