பக்கம் எண் :

New Page 2
 

தமிழ் மொழி வரலாறு

144

மொழி வளர்ச்சியின் பிந்தைய கட்டத்தில் இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது. தனித்த குறுகிய அசைக்கு அடுத்து வரும் மொழி இறுதி மெய்யைத் தொடர்ந்து உயிர் வருமாயின் யாப்பியல் நிலையைக் காக்க, அம்மெய்யானது இரட்டிக்கிறது. தமிழில் தனிக்குற்றுயிரைத் தொடர்ந்து ஒரு மெய்வருமாயின், யாப்பியல் அடிப்படையில் அது நெடிலசையாகும். அதாவது அது மூடசையாய் இருக்கும் பொழுது அதன் வாய்பாடு “(மெய்) உயிர் மெய்” என்பதாகும். தமிழின் ‘அசை முதல் அசை உச்சி’ என்னும் அசை அமைப்புக் காரணமாக மெய்யிறுதியைத் தொடர்ந்து உயிர் வருமாயின் அம்மெய் அவ்வுயிருடன் சேர்ந்து அசையாகிவிடும்.

மெய் உயிர் மெய் + உயிர் > மெய் உயிர் + மெய் உயிர்

முதலில் உள்ள குற்றுயிர் மூடசையாக இருக்கும் நிலையை இழப்பதுடன், இடங்காரணமாக நெடிலசையாக இருக்கும் நிலையையும் இழந்து விடுகிறது. மெய் இரட்டித்தல் இதனைத் தடுக்கிறது.

மெய் உயிர் மெய் உயிர் > மெய் உயிர் மெய் மெய் உயிர் = மெய் உயிர் மெய் + மெய் உயிர்.

இரட்டிக்கும் மெய்களில் ஒன்று பழைய அசையுடனிருக்க, மற்றது அடுத்து வரும் அசையுடன் சேர்ந்து விடுகிறது. ஆனால் ஆரம்ப காலத்திய நிலை இதுவன்று. எனவே எந்த வேற்றுமை உருபுகள் சேரும் பொழுது அவற்றுக்கு முந்திய மெய்கள் இரட்டிக்கவில்லையோ, அவ்வுருபுகள் தமக்கு முந்திய மெய்களை இரட்டிக்கச் செய்யும் வேற்றுமை உருபுகளை விட முற்பட்டவை என்றாகிறது. இங்ஙனம் நோக்குகையில், ‘ஐ, ஆன், இன், ஆல், இல்’ என்பவற்றைவிட ‘அ ¥ அது’ என்பதே பழமையானது எனக் கொள்ள வேண்டும். ‘என’ என்பதை ‘என்னை, என்னான், என்னின், என்னால், என்னில்’ என்பவற்றோடு ஒப்பிட்டு நோக்குக.

அடைத் தொகைகளின் மாறுபட்ட பொருள் நுட்பங்களைச் சிறப்புற வளர்க்கச் செய்யப்பட்ட முயற்சிகளே வேற்றுமை உருபுகள் என முடிவாகக் கூறலாம். இவ்வளர்ச்சியில், வினை அடைகளுடன் வரும் வேற்றுமை உருபுகளுக்கும் பெயரடைகளுடன் வரும் வேற்றுமை உருபுகளுக்கும் இடையேயான வேறுபாடு, சமஸ்கிருத இலக்கணத்தின் அடிப்படையில் புகுத்தப்பட்டது எனினும், தமிழில் அது ஒரு பொழுதும் திட்டவட்டமாகவும் தெளிவாகவும்