பக்கம் எண் :

7
 

தமிழ் மொழி வரலாறு

146

7.சங்ககாலத் தமிழ்

0 மாற்றங்கள் : பொது

மொழியில் பல மாற்றங்கள் நிகழ்கின்றனவெனினும் அவை திடீரென நிகழ்வதில்லை. இதர திராவிடமொழிகள் வழங்கும் பகுதிகளின் எல்லைப்புறங்களை ஒட்டிய பகுதிகளில் வழங்கும் கிளைமொழிகளில் சில பழையவடிவங்கள் தொடர்ந்து வழங்குகின்றன. ஏனெனில் அவை மூலத்திராவிட அல்லது மூலத் தென் திராவிட வடிவங்களைப் போன்று உள்ளன. இவை இலக்கிய மொழியில் பின்னர் வந்திருக்க வேண்டும். பல மாற்றங்களுக்கான சான்றுகள், ஒரு வேளை முன்னைய காலத்திலேயே கிடைக்கக்கூடும். சான்றாக ஈற்றுருபில் நெட்டுயிர் உள்ள வடிவங்கள் குற்றுயிர் உள்ள பழைய வடிவங்களுக்குப் பதிலாக வழங்குகின்றன எனக் கூறப்படுவதைச் சுட்டலாம். ஆனால் நெட்டுயிர் உள்ள வடிவங்கள் தொல்காப்பியத்திலும் குகைக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன. எனினும் காலம் செல்லச் செல்ல இத்தகைய மாற்றங்கள் அதிகம் நிகழ்கின்றன எனக் காண்கிறோம். ஆனால் இலக்கிய மொழி பல பழைய வடிவங்களைப் பேணி வைத்துக் கொள்கிறது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடியது போலச் சாதாரண மக்களுக்கென எழுதப்படும் பொழுது இங்ஙனம் பழைய வடிவங்கள் பேணப்படுவதில்லை; அப்பொழுது அவற்றில் கிளைமொழி வழக்குகள் பல இடம்பெறுவதுண்டு. ஆகவே முதலில் கூறப்பட்டவற்றில் பழைய ஆட்சிகள் இருப்பதையும் பிந்தியவற்றில் வட்டார வழக்குகள் இருப்பதையும் கொண்டு முதலில் கூறப்பட்டவை பிந்தியவற்றைவிடக் காலத்தால் முற்பட்டவையென முடிவு கட்டிவிடக் கூடாது.

1 ஒலியனியல்

1. 1 உயிர்கள்

தொல்காப்பியத் தமிழில் காணப்படும் சில போக்குகள் சங்ககாலத்தில் நன்கு நிலைபெறுகின்றன. தொல்காப்பியத் தமிழ், சில மாற்றங்களைத் தவிர, முழுக்க முழுக்கச் சங்ககாலத் தமிழேயாகும்.