பக்கம் எண் :

New Page 1
 

தமிழ் மொழி வரலாறு

149

நிறீஇ,செயூஉ போன்றவையெல்லாம் உயிர்மயக்கத்தில் முடிகின்றன; இறந்தகாலம் காட்டுகின்றன. இவற்றில் போலவே ஒப்புமையாக்கத்தால் ‘அஆ’ என்னும் உயிர்மயக்கமும் இறந்தகாலம் காட்டத் தொடங்கியிருக்கலாம்.

வருமுறை

இடையண்ண வொலிக்குப் பின்னர் அகரம்

தொல்காப்பியத் தமிழில் இடையண்ண ஒலிகளான ச், ஞ், ய் முதலியன மொழிமுதலில் அகரத்துடன் வாரா. ஆனால் சங்க காலத்தில் இந்நிலை மாறிவிட்டது. இது கிளை மொழிகளிலிருந்தும் பிற மொழிகளிலிருந்தும் கடன் வாங்கியதன் விளைவாக இருக்கக்கூடும். சான்று : சமம்6, ஞமலி7, யவனர்.8

‘செத்தான்’ போன்ற சில சொற்கள் இன்னும் தம் பழைய வடிவத்தைக் கொண்டுள்ளன; இவற்றின் வழக்கு மிகுதியே இதற்கான காரணமாகலாம். ஆரம்பநிலையில் மொழிமுதல் சகர வெடிப்பொலிக்குப் பின்னர் எகர அகர ஒலிகள் வேற்றுநிலை வழக்கில் வாராதிருந்திருக்கலாம். ஆனால் சங்ககாலத்தில் இவ்வாறு வரக்காண்கிறோம்.

சான்று :

சமழ்ப்பு9, செம்மை.10

யகர மெய் மொழி முதலில் தொல்காப்பியர் காலத்தே ஆகாரத்துடனேயே வந்தது. சமஸ்கிருதம் பிராகிருதம் ஆகிய மொழிகளுடனான தொடர்பின் விளைவாக இது பிற உயிர்களுடனும் நாளடைவில் மொழி முதலில் வரலாயிற்று.
 


6. புறநானூறு 14, 9

“சமம் தாங்கவும். . .”

7. புறநானூறு 74, 3

. . “தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய. . .”

8. புறநானூறு 56, 18

“யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்”. . .

9. பரிபாடல் 20, 36

“கள்வன் சமழ்ப்பு முகங்காண்மின்”. . .

10. மதுரைக் காஞ்சி 499

“செம்மை சான்ற காவிதி மாக்களும்”. . .