பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

150

சான்று : யவனர்11, யூபம்.12

குற்றியலுகரம்

விடுப்பொலியாக இருந்த W என்ற ஒலி பின் தனி ஒலியாக - குற்றியலுகரமாக -ஆனது அடுத்த முக்கியமான மாற்றமாகும். செய்யுளில் குற்றியலுகரத்தைத் தொடர்ந்து மெய்வருவதைப் பற்றித் தொல்காப்பியரும் பேசுகிறார்.
சான்று : அக்குளு13. இதன்படி குற்றியலுகரத்தில் முடியும் வேர்களைத் தொடர்ந்து மெய்வரலாம். இங்ஙனம் குறுகிய உகரம் மொழி இறுதியில் மட்டும் வருவது என்று வரையறை செய்யப்பெறவில்லை. ‘விக்குள்’ என்ற ஆக்கச்சொல்லில் ‘விக்கு’ என்பது வேராகும்; ‘உள்’ என்பது தொழிற்பெயர் விகுதியாகும். இங்குள்ள உகரம் குறுகிய உகரமாகும். குறுகிய உகரம் மெய்யால் தொடரப்படுவதையும் அவர் பேசுகிறார்.14 இது இப்படியாயின், இவ்விரு வகையான உகரங்கட்கும் உச்சரிப்பில் ஏதாவது மாற்றமிருக்க வேண்டும். ஒரு குற்றியலுகரம் இன்றுள்ளதைப் போன்ற இதழ்விரிவொலியாகும். மற்ற உகரம் இதழ்குவி உயிராகும். பிற்காலத்தில் மொழியிறுதிக் குற்றியலுகரம் உயிரால் தொடரப்படும் பொழுது பொதுவாக மறைந்து விடுவது வழக்கம். இவ்வாறு மறையாத இடங்கள் சங்க இலக்கியங்களில் உண்டு. தொல்காப்பியர் கருத்துப்படி குற்றியலுகரம் மொழிக்கு இறுதியில் வரும்; ஏனைய இடங்களில் அது முற்றியலுகரத்தைப் போல உள்ளது; அங்கு அது மறைவதில்லை.15

1. 2 மெய்கள்

மென்மை அல்லது மூக்கினச்சாயலை இழத்தல்

சொல்லிறுதியில் வரும் மூக்கொலிகள் மூக்கொலிச்சாயலை இழந்து மருங்கொலியாகின்றன. மூன்றாம் வேற்றுமை உருபான
 


11. புறநானூறு 56, 18.
12. புறநானூறு 15, 21

“யூபம் நட்ட வியன் களம்”.

13. கலித்தொகை 94, 10

“அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன் அருள்மோ”.

14. தொல்காப்பியம் 1267

“குற்றிய லுகரமும் முற்றிய லுகரமும்
ஒற்றோடு தோன்றி நிற்கவும் பெறுமே”.

15. தொல்காப்பியம் 1267

“குற்றிய லுகரமும் முற்றிய லுகரமும்
ஒற்றோடு தோன்றி நிற்கவும் பெறுமே”.