பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

153

அ. பெயர்ப்பதிலி விகுதிகளின் அடிகள்

‘செய்து’ என்னும் வினையெச்சமாக ஆகிவிட்ட பழைய பயனிலை வடிவங்களுடன் பெயர்ப்பதிலி விகுதிகள் சேர்க்கப்படுகின்றன. காலங்களுக்கிடையேயான வேறுபாடு, தன்வினை, பிறவினை ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடு என்பனவெல்லாம் பின்னர் ஏற்பட்ட சிறப்பு வளர்ச்சிகளின் விளைவுகளாகும். முன்னரே குறிக்கப்பட்டது போலத் ‘ து ’ வில் முடியும் வடிவங்கள் சில, ‘ த்து ’ வில் முடியும் வடிவங்கள் சில, ‘ ந்து ’ வில் முடியும் வடிவங்கள் சில என உள்ளன. ஆனால் மூக்கொலியுடன் கூடிய வடிவங்கள் மிகுதியும் அம்மூக்கொலி இன்றியே வழங்குகின்றன. விலகு ~ விலங்கு. ‘து’, ‘ ந்து’ என்பன தன்வினை அடிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. நெடில் வெடிப்பொலியை உடைய ‘த்து’ என்பது பிறவினையாகப் பயன்படுகிறது. சான்று : ‘வருந்து’, ‘வருத்து’. ஆனால் இந்த மாற்று வடிவங்கள் (ந்து ~ த்து) எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. சான்றாக

‘நேர்ந்து’ என்ற வடிவம் உள்ளது; ஆனால் இதற்கு இணையான ‘நேர்த்து’ என்ற வடிவம் இல்லை. பார்த்து என்பதற்கு இணையான ‘*பார்ந்து’ என்ற வடிவம் இல்லை. ‘பார்த்து’ போன்றவை பிறவினையாகத் தோன்றினும் உண்மையில் அவை தன்வினையேயாகும். இத்தகைய முரண்கள் ‘தன்வினை-பிறவினை’ வேறுபாடு என்பது பிந்தையது என்பதைக் காட்டுகின்றன. இரு மாற்று வடிவங்கள் இருந்ததால் ‘தன்வினை-பிறவினை’ வேறுபாடு தோன்றியிருக்கலாம். சிலவேளைகளில், ‘ஈத்து’, ‘ஈந்து’ என்பது போல இரு மாற்றுவடிவங்கள் சில வினைகளுக்கு இருந்தாலுங்கூட, அவற்றை வேறுபடுத்த முடிவதில்லை. இங்கு இரு சொற்களும் ‘ஈதல்’ என்னும் பொருளிலேயே வருகின்றன. அவை இரு வேறு கிளை மொழிகளைச் சேர்ந்த சொற்களாகும்; அவ்வளவே. தமிழில் ‘செயப்படு பொருள் குன்றிய வினை-செயப்படு பொருள் குன்றா வினை’ ஆகியவற்றுக்கிடையே அல்லாமல் ‘தன்வினை-பிறவினை’ ஆகியவற்றுக்கிடையில்தான் வேறுபாடு உண்டு என்பதை வற்புறுத்திக் கூறவேண்டும். ‘செயப்படு பொருள் குன்றியவினை, செயப்படு பொருள் குன்றாவினை’ ஆகியவற்றுக்குத் தனிக் கலைச் சொற்கள் இல்லாமை குறிக்கத்தக்கதாகும். கால்டுவெல் ‘தன்வினை, பிறவினை’ ஆகியவற்றைத் தவறுதலாக முறையே ‘செயப்படு பொருள் குன்றாவினை, செயப்படுபொருள் குன்றியவினை’ என மொழிபெயர்த்தார்.23


23. R. Caldwell:

A Comparative Grammar of the Dravidian Languages,1956, p 449.