பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

154

ஆ. ஈரேவல் வினையும் அவை அல்லா வினையும்(Causal and Non-causal)

தொல்காப்பியத் தமிழிலேயே வினையில் வேறொரு பகுப்பும் உண்டு; அது ‘ஈரேவல் வினை-அவை அல்லா வினை’ என்னும் பகுப்பாகும். குகைக் கல்வெட்டுக்களின் மொழியை ஆராய்கையில் இதனை அறிந்தோம். ஈரேவல் வினை அல்லாதன, வேருடன் எவ்வித விகுதியுமின்றி வரும். ஈரேவல் வினையானது வேருடன் ‘ப்’ விகுதியும் இகரத் துணையும் பெற்று வருகின்றது. ஈரேவல் வினை தொல்காப்பியத்திலேயே பயன்படுத்தப் பெற்றுள்ளதைக் காண்கிறோம். சான்று : “அம்ம கேட்பிக்கும்.”24

‘தன்வினை-பிறவினை’ பாகுபாட்டிற்கும், ஈரேவல் வினைக்கும் அவை அல்லாத வினைக்கும் உள்ள வேறுபாடு யாதெனில், முந்தியது அஃறிணைக்குப் பயன்பட பிந்தியது உயர்திணைக்குப் பயன்படுகிறது. தொல்காப்பியர் பயன்படுத்தியுள்ள “அம்ம கேட்பிக்கும்” என்பதில் இவ்விதி மீறப்படவில்லை. காலங்காட்டும் இடைநிலைகளில் மொழி முதல் வெடிப்பொலி இரட்டித்து வரும் சொற்கள் போல, ‘ஈரேவல் வினைகள்’எப்பொழுதும் உள்ளன. அதாவது அவை தமிழ்ச் சொற்களஞ்சிய 11-ஆவது வினைவிகற்ப வாய்பாட்டிற்குரியவை. சான்று : போர் > போர்ப்பித்த.

இ. பிறவினைகளும் இறந்தகால வடிவங்களும்

பிறவினை அடிகளின் இறந்த காலவடிவங்கள் பலவற்றில் பல்லின வெடிப்பொலிகள் இரட்டித்து வருகின்றன. இவற்றை இரட்டைத் தகர மெய்களென இனங்கண்டு கொள்ளலாம். இரண்டாவது தகரமெய் இறந்த காலம் காட்டுவதாகவும், முதலாவது தகரமெய் பிறவினை விகுதியாகவும் கொள்ளப்படுகிறது. மூக்கொலியெதுவும் அவ்விடத்தில் இருந்தால், அது மறையும். இவ்வாறு பொதுமைப்படுத்துவதால் பிறவினையின் இறந்தகால வடிவம் இல்லாத பொழுதும் முதலில் வரும் தகரமெய் பிறவினை விகுதியாக நிற்கிறது.

சான்று :

நட > நடத்து
        செல் > செலுத்து


24. தொல்காப்பியம் 761.