பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

156

யாகும். படர்க்கை ஆண்பால் விகுதியாக ‘அன்’ வழங்குகிறது. பல பொருள் ஒரு சொல்லாக ‘அன்’ வழங்குவதன் விளைவாக, தன்மை விகுதியாக வரும் ‘அன்’ வழக்கிழக்கலானது. இங்கு நாம் கிள்ளியெரான் (Gillieron) என்னும் அறிஞர் கருத்தைப் பின்பற்றுகிறோம்.

ஆ. முன்னிலை

முன்னிலையில் ‘போதாய்’ போன்ற வடிவங்களின் வழக்கு மிகுதியாகின்றது. பிற பழைய வடிவங்கள் மெல்ல வழக்கிழக்கின்றன. ‘இர், அய்’ ஆகியன மெல்ல மறைகின்றன.

‘ஈர், ஆய்’ முதலியன பெரிதும் பின்பற்றப்படும் ஈறுகளாகின்றன. முன்னிலை ஒருமையின் சிறப்பான விகுதியாக ‘ஐ’ நிலைபெறுகிறது. ஐ > அ + இ. பெயரெச்ச விகுதி, முன்னிலை இடப்பெயர் விகுதி ஆகியவற்றின் கூட்டாக இது தொடங்கியிருக்கலாம். ‘ஐ’ என்பதை முன்னிலை விகுதியாகத் தனியாகப் பின்னர்ப் பிரிக்கலாயினர். பழைய வடிவங்களில் கூட இவ்விகுதி உள்ளது. ‘சென்றீ’30 என்பது போல ஏவலாக ‘வந்தை’31 என்பது வருகிறது. சங்க இலக்கியத்தில் பெயர்ச்சொற்களும் ‘ஐ’ விகுதியைப் பெற்று வினைவிகற்பங்களைக் காட்டுகின்றன. சான்று : ‘கண்ணை’32.

பரிபாடல் வடிவங்கள்

குறிலுயிரை உடைய ‘அன், அய்’ போன்ற விகுதிகள் பெயரெச்ச விகுதியான ‘அன்’ என்பதற்குப் பின்னர் வரும் என்பது முன்னரே குறிக்கப்பட்டது. சான்று : வந்தனன் + அய் > வந்தனனை.

ஆனால் பெயரெச்சம், னகர மெய்யை இழக்கும் பொழுது பின்வரும் இருவகையான வளர்ச்சியினைக் காண்கிறோம்.

1. சந்தியில் நெட்டுயிர் தோன்றுகிறது.

வந்த + அன் > வந்தான்
        வந்த + அய் > வந்தாய்

இவை ‘வந்தோன்’, ‘வந்தோய்’ என அடிக்கடி மாறுகின்றன.


30. அகநானூறு, 46, 16

“சென்றீ பெரும! நிற் றகைக்குநர் யாரே?”

31. கலித்தொகை, 63, 12

“இன்னும் கடம்பூன் டொருகால்நீ வந்தை”.

32. பரிபாடல், 1.