பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

159

வாகிறது. [உண் + து > உண்டு; ‘து’ என்பது ஒன்றன்பால் விகுதியாகும்] சிலப்பதிகாரத்தில் இது உயர்திணையைக் குறிக்க வழங்குகிறது46.

‘அன்’ வடிவம் மறைதல்

‘அன்’ சாரியை உடைய வினைமுற்றுக்கள் மெல்ல மறைந்து நெட்டுயிருடைய வடிவங்களுக்கு இடந்தருகின்றன. ஒன்றன்பாலில் இச்சாரியை மறைகிறதென்றால் ‘செய்தன்று’ என்னும் வாய்பாடு மறைகிறது என்று பொருள்படும். ‘செய்தது’ என்னும் வாய்பாடு அதற்குப் பதிலாக வருகிறது. ‘ஆகின்று47 ~ ஆயின்று’ என்பன போன்ற இறந்த கால வடிவங்களுக்குப்பதில் ‘ஆயிற்று’ என்பது போன்ற இறந்த கால வடிவங்கள் மிகுதியும் ஆளப்படுகின்றன.48 இங்கு மூக்கொலி வெடிப்பொலியாகியுள்ளது.

‘கள்’ விகுதி

பன்மை விகுதியாகிய ‘கள்’ முதன் முதலில் தொல்காப்பியத்தில் ‘மக்கள்’49 என்ற சொல்லில் இடம் பெறுகிறது. ஆனால் இச்சொல்லிலுள்ள ‘கள்’ விகுதியை எளிமையாகப் பிரிக்க முடியாது. பின்னர் தொல்காப்பியர்50 கருத்துப்படி அது அஃறிணையுடன் வருகிறது. அதற்குப் பின்னர் அது உயர்திணையுடனும் வருகிறது. திருக்குறளில் வரும் ‘மற்றயவர்கள்’51 என்னும் ஆட்சியினை நோக்குக.


46. சிலப்பதிகாரம், 19, 51

. . .“பெண்டிரும் உண்டு கொல் பெண்டிரும் உண்டு கொல். . .”

47. ஐங்குறுநூறு, 236, 1

“அன்னையு மறிந்தன ளலரு மாயின்று”. . .

48. குறுந்தொகை, 325

. . .“கருங்கால் வெண்குரு மேயும்
பெருங்குள மாயிற்றென் னிடைமுலை நிறைந்தே”.

49. தொல்காப்பியம்.

50. தொல்காப்பியம் 654

“கள்ளொடு சிவணும் அவ்வியற் பெயரே
கொள்வழி யுடைய பலவறி சொற்கே”.

51. திருக்குறள் 263

“துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தாம்”.