பக்கம் எண் :

4
 

தமிழ் மொழி வரலாறு

169

4. 1 உயிரொலி மாற்றம் - அளவு

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடத்தின் [அல்லது கோவிலின்] பெயர் ‘திருவேட்களம்’ என்பதாகும். அது ‘திருவெக்களம் > திருவகுளம்’ என மாறி உள்ளது. இவ்வாறு குறிப்பாக, நெடில் மெய்களுக்கு அல்லது மெய் மயக்கங்களுக்கு முன்னர் நெட்டுயிர்கள் குற்றுயிர்களாக ஆவது என்பது பல்லவர் காலத்திலும் பின்னரும் பெரு வழக்காகும்.

சான்று: நீக்கி
ஆழாக்கு
தீந்தமிழ்
வீற்றிருந்தருளி
மூன்று
> நிக்கி
> ஆழக்கு
> திந்தமிழ் 
> விற்றிருந்தருளி
> முன்று

4. 2 உயிரொலி மாற்றம் - தன்மை

புதிய மயக்கங்களும் சுரபத்தியும் (svarabhakti)

மெய்யினையும் அதைத் தொடர்ந்து உயிரினையும் உடைய அசையானது, வழக்கால் விதிக்கப்படும் அளவினை உடையதாக இருக்கவேண்டும். அதாவது, மெய்க்கு அரை மாத்திரையும் உயிருக்கு - அதன் அளவைப் பொறுத்து, ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகளும் உண்டு. ஆனால் நீரில் உப்பு கரைவது போல, அசையில் உள்ள மெய்யின் அளவு உயிருடன் கலந்து விடுவதாக உரையாசிரியர்களும் சில இலக்கண ஆசிரியர்களும் கூறுகின்றனர். இதனால் அசையின் அளவு அதில் உள்ள உயிரின் அளவைப் பொறுத்தே அமைகிறது. மெய் ஒலி மறைவதில்லை; ஆகையால் உயிரின் அளவே குறைக்கப்பட்டது. இது தொல்காப்பியரின் குறில் உயிர் பற்றிய கொள்கையையே நமக்கு நினைவூட்டுகிறது. உயிர்கள், குறிப்பாக வெடிப்பொலிகளுக்கும் ர்/ல் ஆகியவற்றுக்கும் இடையில் உள்ள உயிர்கள், அடிக்கடி மறைந்து புதிய மெய்ம் மயக்கங்களுக்கு வழி வகுக்கின்றன; ஆனால் அசையானது ‘அசைமுதல்’ மாதிரியான அசையாக மெய்களின் நெகிழ்வான மாற்றங்களுக்கிடையில் நிலை நிறுத்தப்படுகிறது. பழைய உயிர்களிலிருந்து பெரும்பாலும் மாறுபட்ட சுரபத்தி உயிரை இத்தகைய மெய்மயக்கங்களைத் தவிர்க்கப் புகுத்துவதும் உண்டு.

அ. சுரபத்தி - இ

பிறமொழிச் சொற்களைத் தமிழாக்கும் முறையை ஆராய்ந்தால், சுரபத்தி உயிர்கள் இகரமும் உகரமுமே என்பது புலனாகும்.