|
தமிழ் மொழி வரலாறு 184
நுனிநா பல் மூக்கொலி
உயிரிடையிலும் மொழியிறுதியிலும் வந்தது. ஆனால் நுனிநா நுனியண்ண மூக்கொலியான னகர மெய்
இரட்டித்து வரும் பொழுது அதனை ‘ந்ந்’ எனக் கொள்ளவில்லை. தொடக்கத்தில் இரட்டித்து
வரும்போது இவ்வாறு பிறழ உணரப்பட்டன; ஆனால் வெடிப்பொலிகளால் தொடரப்படும் பொழுது இம்
மயக்கம் ஏற்படுவது இல்லை. ஆனால் பின்னர் நுனியண்ண மூக்கொலிக்குப் பதில் நுனிநா பல்
மூக்கொலி பின்கண்ட வரிசை முறையில் எழுதப்பட்டது.
1. இடையில்
2. இறுதியில
3. முதலில்
4. இரட்டித்து வருமிடத்தில்
ஆனால் பல்லவர்
காலத்தில் நுனிநா பல் மூக்கொலிக்குப் பதில் நுனியண்ண மூக்கொலி வருமிடங்கள்
மொத்தத்தில் பத்து சதவிகிதமேயாகும்; அதே சமயத்தில் நுனியண்ண மூக்கொலிக்குப் பதில்
நுனிநா பல் மூக்கொலி வருமிடங்கள் இரண்டு சதவிகிதமேயாகும். நுனிநா பல் மூக்கொலியின்
இடத்தை நுனியண்ண மூக்கொலி பெற்றுக்கொள்கிறது என்பதையே இது காட்டுகிறது. இப்பதிலீட்டின்
(Replacement) சதவிகிதம் குறைவாக இருப்பது, பல்லவர் காலத்தினில் இம்மாற்றங்கள் நிலைபெறவில்லை
என்பதைக் காட்டுகிறது. நெடில் மூக்கொலிகள் இரு தனிமெய்களாகக் கருதப்பட்டன. இரண்டாவது
மூக்கொலி நுனிநா பல் மூக்கொலியாகவே மிகுதியும் எழுதப்பட்டது. ஒரு வேளை அது மொழி முதல்
எனக் கருதப்பட்டிருக்கலாம்; மொழி முதலில் நுனிநா பல் மூக்கொலியையே எழுதுவது என்ற மரபானது
இங்கிருந்து உருவாகி இருக்கலாம்.
றகர மெய்யும் ரகர மெய்யும்
ஒன்றாதல்
தமிழ் ஒலியன்
அமைப்பில் ஏற்பட்ட பிறிதொரு முக்கியமான மாற்றம் றகர மெய்யும் ரகர மெய்யும்
ஒன்றாகியதாகும். இம்மாற்றத்திற்கான சுவடு பத்தாம் நூற்றாண்டில் தான் கிடைக்கிறது. இது
ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொடங்கியிருக்கவும் இடமுண்டு. கிடைக்கக் கூடிய
சான்றுகளைக் கொண்டு, இம்மாற்றம் நான்கு நிலைகளில் சேர்ந்ததாகக் கொள்ளலாம்.
|