பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

188

இடையண்ண வெடிப்பொலியைப் பொறுத்தவரையில் இலக்கிய மொழி யகர மெய்யைப் பெற்றிருக்க, தமிழில் சில கிளை மொழிகளும் பிற திராவிட மொழிகளும் சகர மெய்யைப் பெற்றுள்ளன. ‘உயர்த்த’ என்பதற்குப் பதில் ‘உசத்த’, ‘குயவர்’ என்பதற்குப் பதில் ‘குசவர்’ என வழங்கும் வடிவங்களை இது விளக்கும்.

2. வெடிப்பொலி அல்லாதன உகர முடிவைப் பெறுதல்

ஒலியன்களின் வருகைமுறையைக் குறித்து இன்னுமொரு செய்தியைக் கூற வேண்டியுள்ளது. பண்டைக் காலத்தில் வெடிப்பொலிகள் மட்டும் மொழிக்கு இறுதியில் வருவதில்லை. அவை உகர முடிவையே கொண்டன. இடைக்காலத்தில் வெடிப்பொலி அல்லாத மெய்களும் சில உயிர்களும் கூட உகர முடிவைக் கொள்ளும் போக்கு உள்ளது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் இப்போக்கு உள்ளது. யாப்பியல் நூல்கள் இப்போக்கை உறுதிப் படுத்துகின்றன. யாப்பியல் அசைக்குரிய அதே வாய்பாட்டில் வருவதால் இந்த உகரம் குற்றியலுகரமாகத்தான் இருக்க வேண்டும். தொழிற் பெயராக வரும் வேரைத் தொடர்ந்து வேறு சொற்கள் வரும்பொழுது, அவ்வேருக்குப் பின்னர் இசை நிறைக்க உகரம் வரலாம் எனத் தொல்காப்பியம் அனுமதிப்பதால் இப்போக்குத் தொல்காப்பியர் காலத்திலேயே தொடங்கி விட்டது எனலாம்.

ஊ. இதழ் விரி உகரம்

மொழியிறுதியாக இல்லாத பொழுது குற்றியலுகரம் முழுமையான குறில் உகரம் போலச் செயற்படுகிறது. பல்லவர் காலத்தில் மொழிக்கு இடையிலும் கூட, அது முழுமையாக ஒலிக்காது விடப்படுகிறது. இந்த உகரம் இதழ்விரி உகரமாகிறதெனலாம்.

5. 4 ஆய்தம்

அசையாக எண்ணப்படும் மெய்யெழுத்து

ஆய்தம் சிலபோது அசையாகலாம் என்பது முன்னர்க் குறிப்பிடப்பட்டது. வெடிப்பொலிகள், ரகர, ழகர மெய்கள் ஆகியன நீங்கலாக எஞ்சிய மெய்கள் செய்யுளிலோ இசையிலோ அசையாகலாம் பின்னர் அவை இரு மெய்களாக எழுதப்படுகின்றன. அசையாக எண்ணப்படும் இம்மெய் நெடில் மெய்யிலிருந்து மாறுபட்டது. சங்க காலத்திற்குப் பிற்பட்ட காலத்து யாப்பியல் நூல்