பக்கம் எண் :

New Page 4
 

தமிழ் மொழி வரலாறு

194

குகரத்துடன் கூடிய வேர் ‘செய்கிலான்’ என எதிர்மறை வடிவத்தில் வரும் பொழுது ஈற்றுருபில் உள்ள நெட்டுயிரே எதிர்மறையைச் சுட்டி ‘கில்’ என்னும் வேருடன் கூடிய ‘கிலான்’ என்பதையே எதிர்மறை காட்டும் சொல்லாகக் கொள்ளச் செய்தது. ‘கில்’ என்பதனை ‘இயலும்’ என்று பொருள் தருவதாகக் கொண்டனர் எனலாம். ஆனால் செய் + கு + இலான் என்பதே பிறழ் பிரிப்பால் ‘செய் + கிலான்’ எனக் கொள்ளப்பட்டது.

நிகழ்கால விகுதியின் தோற்றம்

இறந்த காலம் அல்லாதன காட்டும் விகுதியான பகர அல்லது வகர மெய்யை விடுத்து, நிகழ்காலம் காட்டத் தனி இடைநிலையைப் பெற்றமையே சங்க காலத்திற்குப் பிற்பட்ட தமிழின் முக்கிய வளர்ச்சி எனக் கொள்ளலாம். இந்த நிகழ்கால விகுதி ‘கின்று’ என்பதாகும். பின்னர் இது மூக்கொலியை இழந்து ‘கிறு’ என்றானது. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த வீரசோழியம் ‘கிறு’ என்பதைக் குறிக்கிறது.

அ. சங்க காலத்தில் வழங்கிய ‘செய்கின்று’ வாய்பாடு

‘செய்கின்று’ என்னும் அஃறிணை ஒருமை வடிவம் சங்க காலத்தில் காணப்படுகிறது.

செய்கின்று > செய்கு + இன் + து

‘து’ என்பது அஃறிணை ஒருமை விகுதியாகும். ‘இன்’ என்பது. ‘செய்கு’ என்னும் வாய்பாட்டில் அமைந்த வேர்களுக்குப் பின்னர் வரும் இறந்தகால விகுதியாகும். ஆனால் ஐங்குறுநூறு உரையாசிரியர் போன்றோர் இதனை நிகழ்கால வினைமுற்று வடிவம் என்பதாகவே கொண்டு விளக்குகின்றனர். ‘செய்கு’ (செய் + கு > செய்கு; ‘கு’ என்பது சொல்லாக்க விகுதியாகும்) என்பது தொடக்கத்தில் பெயர்த்தன்மையதாக இருந்தது என்பதை நினைவிற் கொள்வது நலம். பெயர்த்தன்மையுடையதை அடையாக மாற்ற வேண்டுமாயின், அதற்குப் பல வழிகள் உள்ளன. இங்கு ‘இன்’ என்னும் இடைச்சொல் சேர்க்கப்பட்டுள்ளது. இதனுடன் அஃறிணை ஒருமை விகுதியான ‘து’ சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டால் ‘செய்கின்று’ என்பது இறந்தகாலம் காட்டாது குற்றியலுகரத்தில் முடியும் வேர்களோடு இறந்தகாலம் காட்டும் ‘இன்’ விகுதி சேர்க்கப்படும் பழக்கம் அக்காலத்தில் வலுவாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.