பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

2

அனைத்தும் அடிப்படையானதும் தூய்மையானதுமான தமிழிலிருந்தே தொடங்கி வளர்ந்தன என்று கருதியதால் கால்டுவெல்லின் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணமும் இந்த இழிவழக்குகளின் வரலாறு என்ற கொள்கைக்கே ஆக்கம் தந்தது. நமது பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழி வரலாறு கற்பது தமிழ் மொழி வரலாறு ஒன்றின் தேவையை நமக்கு உணர்த்தியுள்ளது. எனினும் இத்தகைய வரலாற்றைத் தொடர்புறக்கூறும் தனித்ததொரு பாடநூல் எதுவும் இல்லை என்பதும் உணரத்தக்கது. இத்தேவையை ஓரளவு நிறைவு செய்யும் நோக்கிலேயே இந்நூல் அமைகிறது.

2. 0 மொழியின் மாறுபடும் இயல்பு

2. 1 சொற்களும் அவற்றின் பொருள்களும்

வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களில் அரசியல், பண்பாட்டு, வணிகத் தொடர்பிலான சூழ்நிலைகளால் தமிழ்மொழி பிறமொழிகளுடன் தொடர்பு கொள்ள நேரிட்டமையால் தமிழ் வழக்காற்றில் இணைந்துவிட்ட பல பிறமொழிச் சொற்களின் வரலாற்றைக் கூறும் ‘தமிழின் புறவரலாறு’ (External history of Tamil) இதில் முதலிடம் பெறுகிறது. தமிழ்மொழியின் சொற்றொகுதி (Vocabulary) வளர்ச்சியினை மொழியின் ‘சொல் மாற்றம்’ (Lexical change) என்ற வகையில் விளக்கலாம். இது தமிழ் மொழி வரலாற்றின் சுவையானதொரு பிரிவாக அமையும். இயற் சொற்களிலும் (Native words) பிற மொழிச் சொற்களிலும் (Foreign words) தொடர்ச்சியான பொருள் மாற்றங்களும் (Semantic changes) நிகழ்ந்துள்ளன. பொருள் மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட ‘பொருளமைப்பை’க் (Semantic structure) காட்டி நிற்கின்றன. சமுதாயத்தில் காலத்திற்குக் காலம் நிகழ்ந்த வளர்ச்சிப் போக்குகளை எதிரொலிக்கும் வகையில் வாழ்க்கையின் பலநிலைகளை வெவ்வேறு முறையில் வலியுறுத்திக் கூறுமுகத்தான் ஒருசொல் தன் பொருள் எல்லையிலிருந்து வேறொரு எல்லைக்கு மாறுதல் பொருள் அமைப்பில் ஒரு மாற்றத்தையே உணர்த்தி நிற்கிறது. சான்றாக ‘அறம்’ என்ற சொல் ‘அறம்’ என்ற பொருள் எல்லையிலிருந்து ‘சமயம்’ என்ற பொருள் எல்லைக்கு ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாக்களில் மாறுகிறது. இச்சொல்அடிப்படையில் ‘நல் ஒழுக்கம்’ என்ற பொருளையே தந்து பின் சமயக் கோட்பாட்டின் அடிப்படையில் நல்லன எல்லாவற்றையும் குறிக்கும் சொல்லாகியது.