பக்கம் எண் :

New Page 5
 

தமிழ் மொழி வரலாறு

212

குறிப்பிட்ட தன்மை அல்லது நிலையின் எதிர்மறையாகும். பழந்தமிழில் இவ்வேறுபாடு ஆழமாக வேரூன்றவில்லை. எனவே தான் ‘செய்கு + அலன் > செய்கலன்’ என்பது வழக்கில் உள்ளது. குகரச் சொல்லாக்க விகுதி இங்கு இருப்பதைக் காணலாம். ‘வந்து + இலன்’ என்பது ‘பொன் + இலன்’ என்பதைப் போன்றதே. ‘வந்து’ என்பது ‘பொன்’ என்பதைப் போலப் பழங்காலத்தில் பெயர்த்தன்மையுடையதாக இருந்தது என்பதை இது மீண்டும் வலியுறுத்துகிறது. ‘செய்து + அன்று > செய்தன்று’17 என்பதையும் நோக்குக. ஆனால் ‘செய்து’ என்பது வினையெச்சமாக கருதப்படும் பொழுது, ‘இலன்’ என்னும் பெயரோடு வரும் வினையடை அமைப்பை விளக்குவது சிரமமாகிறது. எனவே இத்தொகை ‘இல்’ என்னும் எதிர்மறை எச்சத்தோடு கூடிய ஒரே சொல்லாகக் கருதப்படலாயிற்று. எனவே இங்கு இறந்த காலமும் காட்டப்படுகிறது. இவ்ஆட்சி புறநானூற்றின் அளவுக்குப் பழமையானது. ‘போர்ப்பித்திலது’ என்பது புறநானூற்றில் வருகிறது.18 ஆனால் பல்லவர் காலத்தில் இவ்வழக்கு மேலும் மிகுகிறது. பின்னர் நிகழ்கால இடைநிலைகள் வளர்ச்சி யுற்றதும் ‘செய்கின்றிலன்’ என்ற வடிவம் ஆட்சி பெறுகிறது. இங்ஙனம் இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் தனித்தனி வடிவங்கள் உள்ள நிலையில் காலங்காட்டும் உருபில்லாப் பழைய வடிவம் எதிர்காலத்திற்கு உரியதாகிறது.

4. 1. 3. இ. பகுப்பு வடிவம்

பகுப்பு வடிவ வளர்ச்சியும் உண்டு.
சான்று : ‘செய்யவில்லை’

அதாவது ‘செய’ என்னும் வினையெச்சம், எதிர்மறை வடிவமான ‘இல்லை’ என்பதுடன் எல்லா இடங்களுக்கும் எண்களுக்கும் வருகிறது. எதிர்மறையைக் காட்டுவதற்கு இது மிகவும் வசதியான வடிவமாகும். கர்த்தாவை இங்குத் தனியாகக் கூறிவிட முடியும். அதனாலேயே அக்கருத்தினை வலியுறுத்திச் சொல்லவும் முடியும்.

சான்று : ‘அவன் செய்ய - வ் - இல்லை’
இங்ஙனம் காலமும் தனியே சுட்டப்படுகிறது.
சான்று: ‘அவன் நேற்று - செய்ய - வ் - இல்லை’


17. நற்றிணை, 30.
18. புறநானூறு, 286.