பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

214

நீங்கற் பொருளைத் தரும் வினையைக் கொண்டே வேறுபடுத்தப்படுகிறது. இவ்வேறுபாடு வேற்றுமை உருபின் அடிப்படையில் அமைவதன்று.

வேற்றுமை உருபுகளின் ஆட்சி இக்காலத்தில் மிகுகிறது, தமிழின் இந்நிலை பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நன்னூலிலிருந்து தெளிவாகப் புலப்படுகிறது. சாரியைகள் பொருளற்றவையாகின்றன. பெயர்ச் சொற்களில் சாரியைகளின்றி வேற்றுமை உருபுகளைச் சேர்க்கின்ற வழக்கைக் காண்கிறோம். திருக்குறளில் கூட இப்போக்கு உள்ளது; அந்நூலில் ‘அத்து’ இன்றி ‘இல்’ சேர்க்கப்படுகிறது. இது பின்னர்ச் செய்யுள் வழக்காகி விட்டது. ‘மாடத்துக்கு’ என்பதற்குப்பதில் ‘மாடக்கு’ என்பதை நன்னூலார் கையாளுகிறார்.

ஆ. பழைய உருபுகளின் ( Morphs) வழக்கு குறைதல்

சில பழைய வேற்றுமை உருபுகளின் வழக்கு காலப்போக்கில் குறையத் தொடங்குகிறது. -வயின், -மிசை, -கண், -உழி ஆகிய இடப் பொருள் வேற்றுமை உருபுகளும் உளி என்னும் கருவிப் பொருள் வேற்றுமை உருபும் வழக்காற்றிலிருந்து குறைகின்றன. ‘அன்’ சாரியை ‘இன்’ சாரியைக்கு இடந்தருகிறது. ‘இன்’ வேற்றுமை உருபு வரும் பொழுது, ‘இன்’ சாரியை வராது என்ற விதியானது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகப் பின்பற்றப்படவில்லை. ‘கற்பினின்’ என்ற வடிவம் சங்கப் பாடல்களிலேயே வருகிறது. உயர்திணைப் பெயர்களோடு சாரியைகள் பயன்படுத்தப்படலாயின. ‘அவையத்தானும்’(அவை + அத்து + ஆன்) என்பதில் உள்ளது போல இரட்டைச் சாரியைகள் ஆட்சிக்கு வந்தன.

இ. வேற்றுமை உருபில் மாற்றம்

ஈற்று மூக்கொலியான னகர மெய் மூக்கொலித் தன்மையை இழந்து லகர மெய்யாவதால் மூன்றாம் வேற்றுமை உருபான ‘ஆன் > ஆல்’ எனவும் ஐந்தாம் வேற்றுமை உருபான ‘இன் > இல்’ எனவும் பலவிடங்களில் மாறுகின்றன. உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை உருபான ‘ஒடு > ஓடு’ என்றாகிறது.

ஈ. சொல்லுருபு

பழைய வேற்றுமை உருபுகளுக்குப் பதில் சில சொற்களே வேற்றுமை உருபுகளாக வருகின்றன. ‘கொண்டு’ என்னும் சொல் கருவிப் பொருள் வேற்றுமையை உணர்த்துகிறது.