பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

216

அனைத்திலும் காணப்படுவதையும், யாழ்பாணக் கிளை மொழியில் இது விகுதியாக வருவதையும் இங்குக்கருத்திற்கொள்ள வேண்டும். இவ்வடிவம் இலக்கிய மொழியில் பழமையன்றாயினும், கிளைமொழிகளில் பழங்காலத்திலேயே இருந்திருக்க வேண்டும்.

ஆ. முன்னிலை

வேற்றுமை உருபேற்கத் திரிந்த வடிவமாகிய ‘நுன்’, ‘நும்’ என்பதிலிருந்து ஒப்புமையாக்கமாக வந்துள்ளது. பல்லவர் காலத்தில் இது தேவாரத்தில் காணப்படுகிறது. ஆனால் ‘உன்’ என்னும் வடிவத்தைத் தர இது கிளை மொழிகளில் வழங்கியிருக்க வேண்டும். ‘நும்’, ‘நுன்’ என்பன பின்னர் வழக்கு மிகுதியான ‘உம்’, ‘உன்’ என்ற வடிவங்களைத்தந்தன. ‘நீவிர்’, ‘நீயிர்’ ஆகியவற்றுக்குப் பதிலாக நீர்’ என்னும் வடிவம் வளர்ச்சியுறுகிறது.

இ. படர்க்கை

பாலை வேறுபடுத்தாத ‘தான்’, ‘தாம்’ என்னும் படர்க்கைப் பதிலிகளுக்குப்பதில் சார்புநிலைப் பெயர்ப்பதிலிகளான (Derived Pronoun) ‘அவன்’, ‘அவள்’ என்பன வழக்குப் பெறுகின்றன, ‘தான்’, ‘தாம்’, ‘தன்’, ‘தம்’ ஆகியன தற்சுட்டுப்பெயர்களாகவோ,சாரியைகளாகவோ, அழுத்த அசைநிலைகளாகவோ (Emphatic expletives) மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன. பின்னர் இவை காலப் போக்கில் வெறும் இடைச்சொற்களாகவோ அல்லது வேற்றுமை உருபுகளாகவோ ஆகின்றன. ஆறாம் வேற்றுமை உருபான ‘உடைய’ என்பதைப் பெறும் பொழுது பெயர்ச் சொல்லானது ‘சொல்லொட்டு இயல் நிலை விகுதி’(inflexion) எதையும் பெறுவதில்லை. ஏனெனில் இரண்டாம் வேற்றுமை உருபு பெற்றுள்ள பெயர்ச் சொல்லுடன் பயனிலையான ‘உடைய’ என்பது வருவதே இங்குள்ள தொடரமைப்பாகும்.

சான்று : மரமுடைய

ஆனால் இவ் அமைப்பின் தன்மை மறக்கப்பட்டு ‘உடைய’ என்பது ஆறாம் வேற்றுமை உருபாகக் கொள்ளப்பட்டது. அந்நிலையில் பெயர்ச்சொல் பிற வேற்றுமை உருபுகளை ஏற்கும் பொழுது மாறும் வேற்றுமைத் திரிபை இங்கும் பெறுகிறது.

தவம் + அத்து + ஐ > தவத்தை
தவம் + உடைய > தவ - த்த் - உடைய

எழுவாய் வேற்றுமை கூட அசைநிலைகளைப் போலச் சொற்களைக் கொள்கின்றது. இவற்றை வேற்றுமை உருபுகள் எனச் சில இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.