பக்கம் எண் :

v த
 

தமிழ் மொழி வரலாறு

223

v திராவிட மொழிக்கு இன்றியமையாத சொற்கள்

தமிழில் உள்ள ‘நீர், மீன், மின்’ முதலிய சொற்களுக்கு முறையே வடமொழியில், ‘நீர, மீன’ என்னும் சொற்கள் உள்ளன. இச்சொற்கள் எல்லாத் திராவிட மொழிகளிலும் காணப்படுகின்றன. இச்சொற்களுக்குப் பதிலாக வேறு சொற்கள் திராவிட மொழிகளில் கிடையாது. இச்சொற்களின்றித் திராவிட மொழிகள் வேறு சொற்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. ஆனால் இச்சொற்களின்றி வேறு சொற்களை வடமொழி பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆகையால் அவை திராவிடச் சொற்களே ஆகும் எனக் கால்டுவெல்லும் பிறரும் குறிப்பிடுவர். டர்னர் (Turner) என்பார் பல வடமொழிச் சொற்களைத் திராவிட மூலங்களுக்குக் கொண்டு வருகிறார். குண்டர்ட், கிட்டல், கால்டுவெல் முதலானோர் திராவிட மொழி மூலங்களுக்கு இட்டுச் செல்லத்தக்க வட சொற்களின் பட்டியல்களைத் தந்துள்ளனர். சமீபத்தில் பர்ரோ இத்தகைய நீண்ட பட்டியல் ஒன்றைத் தந்துள்ளார். “ஆனால் திராவிடச் சொற்களா எனக் கண்டறிவதற்குப் பர்ரோ தாமே வகுத்துள்ள விதிகளுக்குள் இச்சொற்பட்டியலில் உள்ள எல்லாச் சொற்களும் பொருந்திவாரா”. (என்பர் எமனோ)

புதிய ஆராய்ச்சி தேவை

சில சொல் விளக்கங்கள் (Derivations) ஏறக்குறைய முற்றும் பொருந்துவனவே ஆகும். ஆய்வு முறைபற்றியும், ஆராய்ச்சியாளர் தந்துள்ள சொற்பட்டியலிலுள்ள ஒவ்வொரு சொல்லைப் பற்றியும் புலமை வாய்ந்த அறிஞர்கள் ஆராய்ச்சி செய்தல் வேண்டும். ‘திராவிட மொழிகளின் வேர்ச்சொல் அகராதி’ எல்லாத் திராவிட மொழிகளின் வடிவங்களையும் தருகிறது என்ற முறையில் ஆராய்ச்சிக்குப் பேருதவி புரிவதாகும். இந்நூலில் வகைப்படுத்தப்பட்டுள்ள வடிவங்களை வடமொழி வடிவங்களுடன் ஒப்பிட்டு ஆராயலாம். ஆராய்ச்சி அறிஞர்கள் செய்துள்ள முன்னோடியான பணிகள் புதிய வழியை வகுத்துத் தந்துள்ளன.

கீழைநாடுகள்

சீனம்

கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே சீனாவுக்கும் தென் இந்தியாவிற்கும் இடையே பயன்மிகு தொடர்பு இருந்தது என்பது இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.*



* Pelliot in Toung Pai xiii, p547, 1912.