பக்கம் எண் :

New Page 1
 

தமிழ் மொழி வரலாறு

23

கொண்டு நோக்குகையில் திராவிடமொழி ஆராய்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.

திராவிட மொழிகளில் பிராகூய் தவிர, ஏனைய மொழிகளைப் பேசுவோர் இந்தியாவின் தெற்கிலும் இலங்கையின் வட பகுதியிலும் ஒருசேர வாழ்கின்றனர். தமக்கெனத் தனித்த வரலாற்றையுடைய மொழிகளான தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பேசுவோர் கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டுப் பகுதிகளிலும் வாழ்கின்றனர். இவற்றைப் போல இலக்கியச் செம்மையுறாத பிற திராவிட மொழிகளைப் பேசுவோர் பலுச்சிஸ்தான பீடபூமி, வட இந்தியாவிற்கும் தக்காணத்திற்கும் இடைப்பட்ட பகுதி, தென்னாட்டின் மலைப்பகுதிகள் முதலிய உயரமான பிரதேசங்களில் வாழ்வது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழி இன்றைய தமிழ்நாடு மாநிலத்திலும், மலையாளம் கேரள மாநிலத்திலும், கன்னடம் மைசூர் மாநிலத்திலும், தெலுங்கு ஆந்திரப் பிரதேசத்திலும் பேசப்படுகின்றன. இம்மாநிலங்கள் சேரும் எல்லைப்பகுதிகளில், இரு மொழிகளையும் மக்கள் பேசுகின்றனர். தமிழகத்தின் வடக்கில் தெலுங்கு மொழி பேசும் பகுதி உள்ளது. மேற்கில் கன்னடமும் மலையாளமும் பேசப்படும் பகுதிகள் உள்ளன. மங்களூர் பகுதியில் துளுமொழி பேசப்படுகிறது. குடகு கூர்க் மக்களின் தாய் மொழியாகும். இப்பகுதி மைசூர் மாநிலத்தைச் சேர்ந்ததாகும். படகா, கோட்டா, தோதா முதலிய மொழிகள் நீலகிரியில் பேசப்படுகின்றன. தெலுங்கு மொழி பேசப்படும் பகுதி ஒரு புறத்தில் ஒரியா மொழி பேசப்படும் பகுதியையும் மறுபுறத்தில் மராத்தி மொழி பேசப்படும் பகுதியையும் தொடுகிறது. கோண்டி மொழி அதன் அண்டை மொழியாகும். மகாநதிச் சமவெளியில் உள்ள பீடபூமியில் கூய், கொண்டா மொழிகள் பேசப்படுகின்றன. கோலாமி மொழி மத்தியப்பிரதேசத்திலும் ஹைதராபாத்திலும் பேசப்படுகிறது. பார்ஜி அதற்கு அண்டை மொழியாக விளங்குகின்றது. கன்னட மொழி பேசப்படும் பகுதி மராத்தி, கொங்கணி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகள் பேசப்படும் பகுதிகளைத் தொடுகிறது. கோண்டி மொழி பேசப்படும் பகுதி தெலுங்கு, கோலாமி, முண்டா, மராத்தி முதலிய மொழிகள் பேசப்படும் பகுதிகட்கு அருகில் உள்ளது. திருந்தாத் திராவிட மொழிகளைப் பேசுவோரெல்லாம் மலைப் பகுதிகளிலேயே வாழ்வது நமக்கு வியப்பினை அளிக்கிறது. கதபா, குருக் அல்லது ஒரோன் ஆகிய மொழி