பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

258

மலையாளமும் நெருங்கிய உறவுடையன; எனவே அவற்றை வேறுபடுத்தி அறிவது சிக்கலானதாகும். ‘சக்கை, கஞ்சி, வெள்ளம், அவியல்’ போன்ற சொற்கள் மலையாளத்திலிருந்து கடன் பெறப்பட்டவையாகும். ‘அங்கணம்’ ( = சாக்கடை) போன்ற தமிழ்ச் சொற்கள் இப்பகுதியில் இன்னும் வழக்கில் உள்ளன.

பிற மொழிகள்

மராத்தி

மராத்தியர்கள் தமிழ் நாட்டின் ஒரு பகுதியைச் சில காலம் ஆண்டனர். சிவாஜியின் ‘மாற்றாள் சகோதரரான’ வெங்காஜி 1766 ஆம் ஆண்டில் தஞ்சை நாயக்கர்களை வெற்றி கொண்டார். மராத்தியர்களின் தமிழக ஆட்சி 1800 ஆம் ஆண்டுவரை நடைபெற்றது; பின்னர் கிழக்கிந்தியக் கம்பெனியார் அவர்களை பென்ஷன்தாரர்களாக்கி விட்டனர். கடைசி மராட்டிய ஆட்சியாளரான சரபோஜி (Serfoji) ‘சரஸ்வதி மஹால் நூலகம்’ என்றழைக்கப்படும் நூலகத்தை உருவாக்கினார். வடமொழி, மேலைநாட்டு மொழிகள், மராத்தி, தெலுங்கு மொழி நூல்கள் மட்டுமின்றித் தமிழ் நூல்களும் இந்நூலகத்தில் இடம் பெற்றுள்ளன. அவர் தமிழின் புரவலராகத் திகழ்ந்தார். பல நாடகங்களும் காவியங்களும் (Campu Kavyas) தமிழில் எழுதப்பட்டன. மராட்டியர் பலர் தமிழகத்தில் குடியேறினர்.

55 சொற்கள் மராத்தி மொழியிலிருந்து தமிழுக்கு வந்துள்ளன. அவற்றில் 23 சொற்கள் இன்றும் பேச்சு வழக்கில் உள்ளன. ‘பட்டாணி, காயம்’ (> ghaya) போன்ற சொற்களைச் சான்றாகக் காட்டலாம். கடனாகப் பெற்ற மராட்டியச் சொற்களில் பல, உணவு வகைகள் தொடர்பானவையாகும். ‘கச்சாயம், கிச்சடி, கேசரி, கோசும்பரி, சேமியா, வாங்கி, ஸொஜ்ஜி’ முதலியன அவ்வாறு கடன் வாங்கப்பட்ட சொற்களாகும். ‘கங்காலம், கிண்டி, ஜாடி, சாலிகை குண்டான்’ முதலியன சமையல் பாத்திரங்கள் தொடர்பான சொற்களாகும். காமாட்டி, ஜம்பம் முதலிய சொற்கள் அறிவு, உணர்ச்சி தொடர்பான சொற்களாகும். ‘ஆதரவு’ என்ற பொருளில் வரும் ‘லாகு’ என்ற சொல் மராட்டியச் சொல்லாகும். ‘கைலாகு கொடுத்தல்’ என வருவதை நோக்குக. ‘கோலி’ (= சிறுவர்களின் விளையாட்டு), சாவடி, கண்டி (= ஓர் எடை), சாகி, லாவணி தண்றி, அபங்கம், டோக்ரா முதலிய இசை தொடர்பான சொற்களும் மராட்டியத்திலிருந்து வந்த சொற்களாகும்.