பக்கம் எண் :

சமயச
 

தமிழ் மொழி வரலாறு

262

கிறித்துவச் சமயச் சடங்குகள் தொடர்பாக வழங்கிய போர்த்துக்கீசிய சொற்கள் மறைந்து விட்டன. ‘பாதிரி’ (> padre) போன்ற சில சொற்களே இன்னும் வழக்கில் உள்ளன. கல்விக் கூடங்களின் மதிப்பைக் கிறித்துவப் பாதிரியார்களுடன் போர்த்துக்கீசியரும் உணர்ந்திருந்தனர். ‘கடுதாசி ணு கடதாசி’ (> cartas), ‘பேனா’ (peno) முதலிய போர்த்துக்கீசியச் சொற்கள் இன்றும் வழக்கில் உள்ளன. நமது பள்ளிகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான இவ்விரு பொருட்களுக்கும் போர்த்துக்கீசியச் சொற்கள் வழங்குகின்றன.

புதுமையான சில கலைச் சொற்கள் தமிழில் புகவும் போர்த்துக்கீசியர் காரணமாவர். தாமிரம், துத்தநாகம் ஆகிய இரண்டும் சேர்ந்த கலப்பு உலோகம் ‘தம்பாக்கு’ என வழங்கப்படுகிறது. இது ‘tambuk’ என்ற போர்த்துக்கீசியச் சொல்லிலிருந்து வந்ததாகும். ‘வாத்து’ என்னும் சொல்லும் போர்த்துக்கீசியச் சொல்லாகும். ‘doce’ என்னும் போர்த்துக்கீசியச் சொல் இனிப்பான உணவுப் பொருள் ஒன்றைக் குறிப்பதாகும். இதன் பொருள் விரிவுபட்டு அரிசி மாவில் தயாரிக்கப்பட்ட உணவு வகை ஒன்றுக்கு ‘தோசை’ என வழங்கலாயிற்று.

தமிழ்

போர்த்துக்கீசியம்

சா (= தேநீர்)

>

cha

இலஞ்சி

>

lengo ‘கழுத்துத்துணி’

திராவி

>

trava ‘இறவான இணைப்பு’

அலமாரி

>

almario

மேசை

>

mesa

சாவி

>

chiavi

நிர்வாகத் துறைச் சொற்கள் சிலவும் போர்த்துக்கீசிய மொழியிலிருந்து வந்துள்ளன. ‘சதாரித்தல்’ சாதர் செய்தல் முதலியன போர்த்துக்கீசியச் சொல்லான ‘citar’ என்பதிலிருந்து வந்தனவாகும். ‘பேஷ்கார்’ என்பது ‘fiscal’ என்பதிலிருந்து வந்ததாகும். ‘ஆயா’ என்ற சொல் ‘aia’ என்பதிலிருந்து வந்ததாகும்.

ஸ்பானிஷ் பிரேசிலியன் முதலிய மொழிச் சொற்களும் போர்த்துக்கீசிய மொழி மூலமாகத் தமிழில் புகுந்தன. ‘வெத்தாக்கு கூடு’ என்பது ‘bitacula’ என்ற ஸ்பானிஷ் மொழிச் சொல்லிலிருந்து வந்ததாகும். ‘கொய்யா’ என்னும் சொல் ‘guayaba’ என்னும் பிரேசிலியச் சொல்லிலிருந்து வந்ததாகும்.36



36. Tamil Lexicon, Vol.II.