பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

266

சார்வாதல். தமிழ்ச் சொற்களோடு ஆங்கிலச் சொற்கள் சேர்ந்து தொகைகளாகவும் வருகின்றன.

இன்றைய அறிவியல், பண்பாட்டு வளர்ச்சிகள் இயல்பாக ஆங்கிலச் சொற்களாலேயே குறிக்கப்படுகின்றன.

டெலிபோன் ணு தெலிபோன் > telephone.
டிராம் ணு திராம் > tram.

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நோய்களின் பெயர்களும் ஆங்கிலச் சொற்களேயாகும்.

பிளேக்கு > plague

மொழி முதல் மெய்மயக்கங்கள் சுரபத்தியால் தவிர்க்கப்படுகின்றன. ஆங்கில மருங்கொலி பலவிடங்களில் தமிழில் நாவளை மருங்கொலியாகிறது. ஆங்கிலேயர்களால் புதிதாக இந்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட பழங்களுக்கு ஆங்கிலப் பெயர்களே வழங்குகின்றன. மெலாம் பழம் அல்லது முலாம் பழம் ¥ மலாம் பழம் ¥ மொலாம்பழம் > melon. மகர மெய்க்கு பிந்திய உயிர் இதழ் குவி உயிராகிறது.

சாதாரண மக்கள் ஆங்கிலச் சொற்களில் தமிழ்ச் சொற்களைக் காண முற்படுகின்றனர். இது பாமர மொழி விளக்கப் போக்கின் விளைவாகும். ‘private’ என்பது ‘புறவெட்டு’ என்றாகிறது. ‘doctor’ என்பது ‘டாக்கு தொரை’ என்றாகிறது. இலங்கைக்குப் படகில் செல்லும் பயணிகள் ‘டாக்’ (dock > dockyard ) என்றழைக்கப்படும் துறைகளில் மருத்துவர்களால் சோதிக்கப்பட்ட பொழுது இப்பெயர் வந்தது. ‘தொரை’ என்பது முக்கியமானவரைக் குறிப்பதாகும். ‘correct’ என்பது ‘கரெகட்டு’ என்றாகிறது. ‘writer’ என்பதிலுள்ள ‘அர்’ விகுதி தமிழில் பன்மை விகுதியாகும். அது மரியாதை ஒருமைக்கும் வருகிறது. ஆண்பால் ஒருமை விகுதியான ‘அன்’ விகுதியைப் பெற்று ‘ரயிட்டன்’ என்ற சொல் வருகிறது. இது செல்வந்தர் கிளார்க்குகளைத் தாழ்ந்தவர்களாகக் கருதியதன் விளைவேயாகும்.

அனைத்துலகக் கலைச்சொற்களை (இவை நமக்கு ஆங்கிலத்தின் வாயிலாகவே வருகின்றன) அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என நமது தலைமையமைச்சர் திரு. ஜவஹர்லால் நேரு வற்புறுத்தினார். இந்தியாவிலுள்ள அறிவுப் பணி நிறுவனங்கள் இப்பரிந்துரையை ஏற்றுக் கொண்டுள்ளன. எதிர்காலத்திலும் ஆங்கிலச் சொற்கள் தமிழில் புகும் என்பதே இதன் பொருளாகும்.