பக்கம் எண் :


தமிழ் மொழி வரலாறு

272

வீரசோழியம்

தான் இழிந்தது எனக் கருதும் சில வழக்குகள் பற்றி வீரசோழியம் குறிப்பிடுகிறது.5 அவை மூன்று வட்டாரங்களில் பரவியிருந்தன என அதன் உரையாசிரியர் காட்டுகிறார்.

1. கருமண் நிலப்பகுதி. (கொங்கு நாடு - கோயமுத்தூர்,சேலம் மாவட்டங்கள்)

2. காவிரி பாயும் பகுதி (சோழ நாடு)

3. பாலாறு பாயும் பகுதி (பல்லவ நாடு)

முதலில் கூறப்பட்ட வட்டாரத்தில் ழகர ளகர மெய்கள் மயங்கி வருகின்றன.

1. ழ் > ள்

நாழி > நாளி
உழக்கு > உளக்கு
கோழி > கோளி
வாழை > வாளை
வழி > வளி
மூழை > மூளை

2. ள் > ழ்

விளக்கு > விழக்கு
பளிங்கு > பழிங்கு
தளிகை > தழிகை
இளமை > இழமை

காவிரி பாயும் பகுதியில் (சோழநாட்டில்) இரட்டித்த நுனியண்ண வெடிப்பொலியும் இரட்டித்த இடையண்ண வெடிப்பொலியும் மயங்கி வருகின்றன. நெடில் நுனியண்ண வெடிப்பொலி, நெடில் நுனிநா பல் வெடிப்பொலியாகவும், நெடில் நுனிநா பல் வெடிப்பொலி இ, எ, ய் ஆகியவற்றுக்குப் பின்னரும், சிலவிடங்களில் எல்லா ஒலிகளுக்குப் பின்னரும் இடையண்ணச் சாயல் பெற்று நெடில் இடையண்ண வெடிப்பொலியாவதும் இம்மயக்கத்திற்குரிய காரணங்களாகும்.

வெற்றிலை > வெச்சிலை
முற்றம் > முச்சம்
கற்றை > கச்சை


5. வீரசோழியம், 82, பெருந்தேவனார் உரை