பக்கம் எண் :

உயர
 

தமிழ் மொழி வரலாறு

292

உயர்வைக் குறிக்கும் விகுதிகள் தோன்றின. தொல்காப்பியரே ‘உயர்சொற்கிளவி’ அல்லது மரியாதை ஒருமை பற்றிப் பேசுகிறார்.8 முக்கியத்துவம் உடையோர் ஒரு செயல் செய்கின்றபோது அவர்களை ஏனையோரிலிருந்து பிரித்துக் குறிப்பிடப்படும் பொழுது உடனிகழ்ச்சிப் பொருள் வேற்றுமை உருபான ‘ஓடு’ என்பதனைப் பயன்படுத்துவதன் மூலம் வேறு பிரித்துக் காட்டப் பெறுவர். ஏனையோரைக் குறிக்க வெறும் பெயர்ச்சொல் மட்டுமே பயன்படுத்தப் பெறும்.

சான்று : “அரசரொடு அமைச்சர் வந்தார்”

உயர்வுகாட்ட ஆண்பால் அல்லது பெண்பாற்சொல்லுடன் ‘ஆர்’ விகுதி சேர்க்கப்படுகிறது.

சான்று : அகத்தியனார் மகளார்

‘நரியார்’ என்பதைப் போல, ‘ஆர்’ விகுதியை ஏளனப் பொருளில் கையாளுகையில் முரண்சுவை தோன்றுகிறது. படர்க்கையில் உயர்வு ஒருமையைக்காட்ட ‘ஆர்’ விகுதி பயன்படுத்தப்படுகிறது. தன்மையிலும் முன்னிலையிலும் பன்மையே உயர்வு ஒருமைக்கும் பயன்படுத்தப்படுகிறது. சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் பெருகப் பெருக, வேறுபாட்டை மிகுதிப் படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. ‘ஆர்’ என்பது முக்கியமானவர்களைக் குறிக்கும் விகுதியாக வழங்க, அதிலிருந்து வேறுபட்டு ‘ஆர்கள்’ (ஆர் + கள்) என்பது மிகவும் முக்கியமானவர்களைக் குறிக்கும் விகுதியாக வழங்கலாயிற்று. பலர்பால் விகுதியான ‘அர்’ அல்லது ‘ஆர்’ என்பது உயர்வு ஒருமைக்கு வழங்கியது. இத்துடன் ‘அவர்கள்’ என்பதும் பெயர்கட்குப் பின்னர் இடம் பெற்றது.

சான்று: “கந்தப்ப முதலியார் அவர்கள்”

படர்க்கை முன்னிலைப் பன்மையாக வழங்குதல்

முன்னிலையில் பன்மை வடிவங்கள் உயர்வு ஒருமையைக் குறிக்க ஆளப்படுகின்றன. பின்னர் ‘நீர்’, ‘நீங்கள்’ ஆகியவற்றுக்



8. தொல்காப்பியம், 510

“ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய உயர்சொற் கிளவி;
இலக்கண மருங்கின் சொல்லா றல்ல.”