பக்கம் எண் :

New Page 6
 

தமிழ் மொழி வரலாறு

35

தெலுங்கில் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி இது நடைபெறுகிறது. இரண்டாவது அசைவில் நாவளை ஒலி இருந்தால் தமிழிலும் மலையாளத்திலும் இவ் இடையண்ணமாதல் நிகழாது. தமிழில் ‘கெடு’ என்பது ‘செடு’ என மாறாது. ஆனால் தெலுங்கில் அவ்வாறு மாறும். ‘கிளி > சிளி’ (சிலுக) எனத் தெலுங்கில் மாறுவதைப் போலத் தமிழில் மாறுவதில்லை. இக்காலத்தமிழில் வழங்கும் ‘கெம்பு’ போன்ற சொற்கள் இவ்விதியை ஒட்டி மாறுவதில்லை. விசயநகரப் பேரரசுக் காலத்தில் கன்னடத்திலிருந்து அச்சொற்கள் கடன் பெறப்பட்டன என்பது தெளிவு.

பழைய வடிவங்களில் ககர சகர மாற்றம், பின் உயிரால் தொடரப்படுங் காலையும் நிகழ்தல் உண்டு. சான்று: ‘குருள் > சுருள்’. அவை இரண்டு மாறுபட்ட வேர்களாகவும் இருக்கலாம். இந்தச் சூழல்களில் உகரம் இதழ்விரி இடை உயிராக இல்லையா என்பது ஆய்வுக்குரியது. இதற்கு முடிவுகாண இது தொடர்பான எல்லாச் செய்திகளையும் ஆராய்தல் வேண்டும். இடையண்ணச் சகரமே தொடக்கத்தில் இருந்தது என்றும் அது கடையண்ண அடைப்பொலியாக ( Stop)அல்லது உரசொலியாக ( fricative) மாறியது எனவும் சிலர் கூறுவர். அது அப்படியாயின் இடையண்ண ஒலி, கடையண்ண ஒலியாதல் விந்தையே ஆகும். ஏனெனில் பல மொழிகளில் பொதுவாக, கடையண்ண ஒலி, முன் உயிருக்கு முன்னால் இடையண்ண ஒலியாவதற்கே சான்றுகள் மிகுதியும் உள்ளன.4

ஈ. தமிழ் - மலையாளக் குழுவும் பிற தென் திராவிட மொழிகளும்

தமிழ் - மலையாளக் குழுவில் பிற திராவிட மொழிகளிடம் இல்லாத மற்றொரு தனி இயல்பு உள்ளது. இது முதலசையில் குற்றுயிரைப் பெற்றுள்ள வேர்ச்சொல் தொடர்பானது. முதலில் உள்ள குற்றுயிர் அடுத்து வரும் குற்றுயிருக்கு ஏற்ப மாறும் தன்மை உடையதாக உள்ளது. அடுத்து வரும் உயிர் ‘ உயிராயின்’ ( High vowel), அது பின்னுயிராயினும் (Back vowel) முன்னுயிராயினும் முதல் உயிரில் மாற்றம் ஏற்படுவதில்லை. அடுத்து வரும் அசை - அது ஆக்கநிலை விகுதியாக ( Derivative suffix) இருக்கலாம். அகரத்தில் தொடங்கினால் சிக்கல் ஏற்படுகிறது. அகரம் தொடர்ந்தால் வேரசையில் இ, உ, அ ஆகிய மூன்றில் ஒன்றே இருக்கும். தமிழிலும் மலையாளத்திலும் இங்ஙனம் ஏற்படுகிறது. கன்னடத்திலும் தெலுங்கிலும் இ, உ, அ வுக்குப் பதில் எ, ஒ, அ முதலியன


4. C. F. Hockett:

A Course in linguistics, p 456.