பக்கம் எண் :

 

தமிழ் மொழி வரலாறு

36

வருகின்றன. மூலத் திராவிட எகரமும் ஒகரமும் தமிழில் இகரமாகவும் உகரமாகவும் ஆயின என்றும் மூலத்திராவிட இகரமும் உகரமும், எகரமாகவும் ஒகரமாகவும் கன்னடத்திலும் தெலுங்கிலும் ஆயின என்றும் பொருள்படுகின்றது. மூலத்திராவிட இகரமும் எகரமும் மூலத் தென் திராவிடத்தில் எகரம் என ஒன்றாகிவிட்டன என்றும் மூலத்திராவிட உகரமும் ஒகரமும் மூலத் தென் திராவிடத்தில் ஒகரமென ஒன்றாகிவிட்டன என்றும் ப. கிருட்டிணமூர்த்தி என்பார் கூறுகிறார். தமிழிலும் மலையாளத்திலும் வேறொரு மாற்றமும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.5 அடுத்து வரும் அசையில் அகரம் இருந்தால் முதலசையில் உள்ள மூலத்திராவிட எகரம் தமிழில் இகரமாகிறது. அதுபோல மூலத்திராவிட ஒகரம் அந்தச் சூழலில் உகரமாகிறது.

இக்காலத் தமிழில் முதலசையில் பழைய இகரமும் உகரமும் அகரத்தால் தொடரப்படும் பொழுது எகர ஒகரமாக மாறுகின்றன. மூலத் தென் திராவிட மொழியைப் பற்றி ஆராய்கையிலும் மூலத் தென் திராவிட மொழியிலிருந்து தமிழும் மலையாளமும் பழங்காலத்தில் பெற்ற வளர்ச்சிகளை ஆராய்கையிலும் இப் பிற்கால மாற்றத்தினைக் கருத்தில் கொள்ளக்கூடாது. ஆனால் சில மாற்று வடிவங்கள் ( Alternant forms) - அவைகள் மூலத்திராவிட வடிவங்களுடைய கிளைமொழிகளிலிருந்து வந்தனவாயிருக்கக் கூடும் - நமக்குக் கிடைத்துள்ளன. சான்று: வெளிச்சம், விளக்கு, நெஞ்சு, நினை.

இலக்கண அமைப்பு

i பெயர்த் தன்மையுள்ள வாக்கியங்கள் - காலங்காட்டாதன

மூலத் திராவிட மொழியைப் பற்றி இல்லாவிடினும் மூலத் தென் திராவிட மொழியின் ஆரம்ப நிலையைப் பற்றிய அதனது தனிச்சிறப்பியல்பான சில உருபனியற் கூறுகளைப்பற்றி இங்குக் காண்போம். மூலத் தென் திராவிட மொழியில் வாக்கியங்கள் வினைத்தன்மையனவாக இல்லாமல் பெயர்த்தன்மையனவாக இருந்தன எனத்தோன்றுகிறது.6 அக்காலத்தில் வழங்கிய வாக்கியங்கள் எதுவும் இன்று இல்லை. பயனிலையாக இன்றளவும் வழங்கும் சில வினைவடிவங்களைக் கொண்டே நாம் இம்முடிவுக்கு வருகிறோம். முன்னரே குறிப்பிட்டது போலத் தமிழ் வினைமுற்றுக்களின் அமைப்பு இரு அடுக்குகளைக் காட்டுகிறது.


5. Bh. Krishnamurthi :

Telugu Verbal Bases, p 112 onwards, 1958.

6. S. Vendreys :

Language, p 120 onwards, 1952.