|
தமிழ் மொழி வரலாறு 4
பயனிலை பின்னுமாக
அமையும் பெருவழக்கினின்றும் மாறுபட்ட பழைய வழக்கினைச் சுட்டி நிற்கிறது.
3. 0 அடிப்படைச்
சான்றுகள் (Sources)
3. 1 இலக்கியம்
தமிழ்
மொழியின் வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளுக்கு இலக்கியங்களையே முதன்மையாகக் கொள்ள
வேண்டியதிருக்கிறது. இலக்கியம் என்று குறிப்பிடுகின்ற பொழுது இலக்கியத் தரம் வாய்ந்த
நூல்கள் என்ற வரையறைக்கு உட்படுத்தாது எல்லாப் பொருள்களையும் பற்றிய உரைநடை அல்லது
செய்யுள் வடிவில் உள்ள எல்லாத் தமிழ் நூல்களையும் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். இங்கு
இலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில் தள்ளப் பெற்ற இலக்கியமல்லாத நூல்களே ஒருவேளை
நமக்குப் பெரும்பயன் தருவனவாக இருக்கலாம். நூல்களையும் இருவகைகளாகப் பிரித்தல் வேண்டும்.
1. இலக்கிய மொழி நடையில் (literary
language) அமைந்தவை.
2. பேச்சு மொழி நடையில் (Colloquial
language) அமைந்தவை.
மிகுந்த
தொல்லைகளோடன்றி இலக்கிய மொழியில் பேச்சு மொழி வழக்குகளைக் கண்டறிதல் கடினமே.
கலம்பகங்களிலும் சைவ, வைணவக் குரவர்கள் பாடிய பாடல்களிலும் நாட்டுப் பாடல்களிலும்
தற்காலப் பாடல்களிலும் பேச்சு வழக்கிலுள்ள சில தொடர்கள் மீட்டும் மீட்டும் வருதலைக்
காணலாம். “பழமொழி” போன்ற சில இலக்கிய நூல்களில் குறித்துப் பாதுகாக்கப் பெற்று வரும்
பழமொழிகள் பேச்சு வழக்கு இலக்கியத் திறனைச் சார்ந்தன ஆயினும் இலக்கிய மொழி
நடையிலேயே காணப்பெறுகின்றன. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குப் பின்னரே பாமர
மனிதனின் தேவைகளை நிறைவு செய்கின்ற இலக்கியங்கள் தோன்றி வளர்வதனைக் காண்கிறோம்.
இவ்வகையில் கள்வனின் பாட்டாகிய நொண்டிச்சிந்து, குடியானவரின் நாடகமாகிய பள்ளு,
கட்டபொம்மன் கும்மி, ராமப்பையன் அம்மானை, கான்சாகிப் சண்டை போன்ற பழையனவும்
புதியனவுமாகிய கதைகள், நிகழ்ச்சிகள் ஆகியனவற்றை எளிய நடையில் விளக்கும் பல
அம்மானைகள் ஆகியனவற்றைச் சுட்டலாம். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் படித்தறியாத
பாமரமக்களின் பேச்சுவழக்குக்கள் கொண்ட நாடகங்கள், புதினங்கள் ஆகியவற்றைக்
காண்கிறோம். இவை பேச்சு வழக்கினை ஆராய்வதற்கு இன்றியமையாதன.
|