|
தமிழ் மொழி வரலாறு 5
3. 1. 1
எச்சரிக்கைகள் (Safeguards)
மேற்கூறியவற்றை ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்கின்ற போது மிக்க கவனத்துடன் பயன்படுத்துதல்
வேண்டும். முதலாவதாகப் பல நூல்களுக்கு நல்லனவும் நம்பக்கூடியனவு மான பதிப்புக்கள் இல்லை. பல
நூல்கள் பதிப்பிக்கப்பெறாமல் உள்ளமையால் அவற்றை ஏடு அல்லது கையெழுத்துப்படி நிலையிலேயே
ஆராய வேண்டியுள்ளது. அப்படியே நூல்கள் மிக நல்லமுறையில் கிடைப்பதாயிருந்தாலும் அவை
பழையனவும் புதியனவுமாகிய வழக்காறுகளைக் கொண்ட அருங் காட்சியகமாகவே உள்ளன. தமிழ்ப்
புலவர்கள் “முன்னோர் மொழி பொருளே யன்றி யவர் மொழியும் பொன்னே போற் போற்றுவர்”.1
பேச்சுமொழி இலக்கியங்களில் கூடப் புலவர்கள் வட்டார வழக்கு மாற்றங்களைக் குறிக்க இயலாத
நிலையில் உள்ள தமிழ் நெடுங்கணக்கினையே பயன்படுத்துவதால் பழைய ஒலிப்பு முறையினைக்
கண்டறிதல் கடினமாகின்றது.
3. 2 தமிழ்ச்
சான்றோர் இயற்றிய இலக்கண நூல்கள்
அடுத்து
நமக்குக்கிடைக்கும் அகச்சான்றுகளாவன இலக்கணங்களும் அவற்றின் உரைகளுமே. மொழியின்
அமைப்பினை விளக்க எழுந்த சிறந்த முயற்சிகள் இவை. நல்ல காலமாக இந்நூல்களில் தமிழ்
ஒலிகள் பற்றிய ஒலிப்பு முறை விளக்கங்கள் உள்ளன. இது போலப் புணர்ச்சி மாற்றங்களும்
விரிவாக விளக்கப்பெற்றுள்ளன. மொழியினது உருபனியல் பற்றி விளக்கும் பகுதியும் இங்கு
உண்டு.
3. 2. 1
எச்சரிக்கைகள்
மேற்கூறிய அகச்சான்றுகளையும் மிகுந்த எச்சரிக்கையுடனேயே கையாளல் வேண்டும். ஏனெனில் பழைய
கருத்துக்களையே தங்கள் காலத்திய மொழியில் விளக்குகின்ற போக்கே இந்நூல்களில்
காணப்படுகிறது. மேலும் பின்னைய இலக்கண ஆசிரியர்கள் ஒலிப்பு முறைகளைப் பற்றி விளக்கும்
பொழுது தங்கள் காலத்தில் வழக்கிலிருக்கும் ஒலிப்பு முறையினை ஆராய முயற்சி செய்தார்களா
என்பது ஐயத்திற்குரியது. எடுத்துக்காட்டாகப் பின்னைய இலக்கண ஆசிரியர் ஒருவர் அடிநா அடியண
முறயத்தோன்றும் என்று யகரத்தின் ஒலிப்பு முறைபற்றிக் கூறுவதைச் சுட்டலாம்.2
|
1.
நன்னூல் 9
2.
நன்னூல் 82.
|
|