பக்கம் எண் :

New Page 5
 

தமிழ் மொழி வரலாறு

40

‘உணர்ந்திசின்’ போன்ற வடிவங்களில் ‘இசின்’, ‘அசைநிலை’ ( expletive) எனக் கருதப்படுகிறது. எஞ்சி நிற்பது ‘உணர்ந்து’ என்பதாகும். முன்னிலை ஒருமை ‘ஐ’ இவ்வாய் பாட்டில் சேர்க்கப்பட ‘வந்ததை’14 எனும் வடிவம் கிடைக்கிறது. இந்த முன்னிலை வடிவத்துடன் பழைய வியங்கோள் விகுதி சேர்க்கப்பட்டால் ‘மறந்தைக்க’ என்ற வடிவம் கிடைக்கிறது. (மறந்து + ஐ + க)15 இவற்றின் முக்கியத்துவம் என்னவெனின், காலம் காட்டாப் பயனிலை ( Predicates) எனக் கூறப்படும் இவை, பழங்காலத்திலிருந்தே இறந்த காலச் “செய்து”வாய்பாட்டு வினையெச்சங்களாகத் தமிழில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பதேயாகும்.

இம்முடிவை ஆதரிக்க முன்றாவது வகையான சான்றுகளும் உண்டு. ‘நின்றாங்கு, கண்டாங்கு’ என்பன போன்ற பல வடிவங்கள் உண்டு. ‘ஆங்கு’ என்பது ஒப்புமைச் சொல்லாக ( Particle of similarity) ஆக்கப்பட்டு விடுகிறது.16 இங்கு வந்தது போன்று வினைகளுக்குப் பிறகே இது வருகிறது. இங்கு ‘ஆங்கு’ என்பது நீக்கப்படுமாயின் எஞ்சியது ‘நின்று’ எனும் வடிவமே. ‘செய்து’ எனும் வினையெச்சம் ( Conjunctive participle) ஆகத் தோன்றுவது உண்மையில் வினைப் பயனிலையேயாகும். இவ்வாறே உரையாசிரியர்களும் விளக்கியுள்ளனர். செய்தென எனும் வாய்பாட்டிலும் ‘செய்து’ என்பதைப் பயனிலை எனக் கொள்ளலாம்.17


14. கலித்தொகை 63

“. . .கடம்பூண் டொருகால்நீ வந்ததை யுடம்
பட்டாள்...”

15. T. Burrow :

BSOAS, Vol. XI, Part III, p 604.

Bh. Krishnamurthi :

Telugu Verbal Bases, p 74, 1961.

V. Venkatarajulu Reddiar :

Tamil Collamaippu, p 63,1956.

“. . .பொய்யினாற் பரிவுண்ட நன்மையோ
மறந்தைக்க...”

16. திருமுருகாற்றுப்படை 12

“உலக முவப்ப வலனேர்பு திரிதரு
பலர் புகழ்ஞாயிறு கடற்கண் டாஅங்கு”

17. ‘செய்தென’, ‘உற்றென’ என்னும் வாய்பாடுகள் பரிபாடலில் இடம் பெறுகின்றன.(பரிபாடல் 7, 24-25)

“. . .அவிழ்ந்த மலர்மீ துற்றென ஒருசார்
மாதர் மடநல்லார் மணலின் எழுதிய. . .”