தமிழ் மொழி வரலாறு
54
உச்சியின் வலப்புறத்தில் உள்ள படுக்கைக்கோடு நெட்டுயிர் ஆகாரத்தைக் குறிக்கும்; உச்சியின் இடது புறத்தில் உள்ள
படுக்கைக்கோடு ஏகாரத்தைக் குறிக்கும் ; இரு புறங்களிலும் படுக்கைக்கோடுகள் வருமாயின் அது
ஓகாரத்தைக் குறிக்கும். ஆனால் இவ்வரிவடிவத்தின் தென்னக வகையில், இக்கோட்டின் அளவானது
வேறுபடுத்தப்பட்டுள்ளது. இங்கு நீண்ட கோடு நெட்டுயிரையும் குறுகிய கோடு குற்றுயிரையும்
குறிக்கின்றன. கோட்டின் அளவு வேறுபாட்டால் ஏகாரமும் எகரமும், ஓகாரமும் ஒகரமும்
வேறுபடுத்தப்படுகின்றன. அசோகரது கல்வெட்டுக்களில் ‘க’ என வாசிக்கப்படுவது இங்கு ‘க்’
என்றே வாசிக்கப்படவேண்டும். தென்னகப் பிராமி வரிவடிவம் தனிவகையானது என்பதை
இவ்வேறுபாடுகள் காட்டும்.
மெய்கள்
தற்கால ஆங்கில
வரிவடிவத்தில் உள்ள ‘G’ என்பது போன்ற ஓர்
எழுத்து தென் மாவட்டப் பிராமி வரிவடிவத்தில் காணப்படுகிறது. அதுவே ழகரம் என
இனங்காணப்பட்டது. இதுவே குகைக்கல்வெட்டு மொழியின் உண்மைத் தன்மையை
வெளிப்படுத்துகின்றது. அசோகரது கல்வெட்டுக்களின் பிராமி வரிவடிவத்தில் நுனிநா பல்
மூக்கொலியான நகர மெய்யானது படுக்கைக் கோடு ஒன்றின் நடுவில் நிற்கும் செங்குத்துக்
கோட்டால் குறிக்கப்பட்டுள்ளது. அதைப்போன்ற ஓர் எழுத்து, ஆனால் வலது புறம் சிறு வளைவுடன்
கூடியதாக உள்ளது காணப்படுகிறது. அது னகர மெய்யாக இருக்கலாம் என உணரப்பட்டது. தமிழை
அறிந்தோர் அதை நுனியண்ண மூக்கொலியாகவே கொள்வர். நுனிநா பல் மூக்கொலியான நகர
மெய்யுடன் இம்மெய்யொலிக்கு “வேற்று நிலை வழக்கு” உண்டு என்பதை இது காட்டுகிறதா என்ற
வினா எழுகிறது. தமிழ் வரிவடிவம் ஒன்று இருந்திருக்க, அதனையே இங்குப் பிராமி வரி
வடிவத்தில் எழுதியிருக்க வேண்டும் எனில், தமிழில் இவ்வொலிகட்கிடையில் வேற்று நிலை
வழக்கு இல்லாத பொழுது பிராமி வரிவடிவத்தில் இவ்வொலிகள் வேறுபடுத்தப் பட்டிருக்கத்
தேவையில்லை. ஆனால் தமிழ் வரி வடிவம் எதுவும் அக்காலத்தில் இருந்ததா என்பது
ஐயப்பாட்டிற்குரியதே. அது அங்ஙனமாயின் குகைக்கல்வெட்டுக்களை எழுதுவதற்குக்
காரணமாயிருந்தோர் - அவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவராக இருந்திருக்கலாம்
- இவ்வொலிகட்கு இடையிலுள்ள வேறு
|