பக்கம் எண் :

New Page 7
 

தமிழ் மொழி வரலாறு

62

சேர்த்தால், அது பெயரடையாகிறது. சான்று : பிறந்து + அ = பிறந்த. மொழி இறுதியில் வெடிப்பொலிக்குப் பின்னர் வரும் உகரம் ஓர் உயிரால் தொடரப்படும் பொழுது இழக்கப்படுகிறது. இவ் அகர விகுதியை இலக்கண நூலார் பெயரெச்ச விகுதி என்பர். பெயரெச்சத் தொடராக அது மொழி பெயர்க்கப்படுவதால், அது பெயரெச்சம் என வழங்கப்பட்டது. அடையாக இருந்தாலும் பெயரடை போலவும், வினையின் அடிப்படைச் செயற்பாடுகளைக் கொண்டதாக இருப்பதாலும் இதனது வேர் வினையே என்பதாலும் வினைக்கு அடையாக வரும் இயல்புடைய எழுவாய், செயப்படுபொருளை ஏற்கக்கூடுமாதலாலும் இதை எச்சம் என்கிறோம்.

‘வந்து போனான்’ என்பது போன்ற வாக்கியங்களில் ‘போனான்’ என்பது தெரிநிலை வினைமுற்றாகும். ‘வந்து’ தெரிநிலை வினைமுற்றன்று. ‘வந்து பின்னர்’ என்ற பொருளில் அது விளக்கப்படலாம். எனவே அது உம்மைப் பொருளில் வரும் வினையெச்சம் என வழங்கப்படுகிறது. யூல் ப்ளாக் இதை முற்று ( Absolutive) எனக் குறிப்பிடுவார். தெரிநிலை வினைமுற்றுக்களுடன் முடியும் எச்ச வடிவங்களைப் பழைய இலக்கண நூலார் வினைஎச்சம் என்பர். இதுபோலப் பெயருடன் முடியும் எச்ச வடிவங்களைப் பெயரெச்சம் என்பர். எச்சம் என்றால் குறையுடையது எனப் பொருள்படும். அஃதாவது முற்றல்லாததாம். பெயரெச்சம் பெயரடையாக இருக்கும்; வினையெச்சம் வினையடையாக இருக்கும். முற்றல்லாதன என்பதோடு அவை தனித்து வழங்கக்கூடிய வடிவங்களாகவும் இருக்கவேண்டும். இருபெயரொட்டமைப்பிலும் அடை அடைகொளி என்ற அமைப்பிலும் வரும். ஏனெனில் முற்றல்லாதனவாகிய கட்டு வடிவங்களும் முற்றுவடிவங்களும் அவ்வாறு அழைக்கப் பெறுவதில்லை. இதனால் தான் இலக்கண ஆசிரியர்கள் பெயரடை ( Adjective), வினையடை ( Adverb) எனும் சொற்களைப் பயன்படுத்தவில்லை. குகைக் கல்வெட்டுக்கள் சிறியவையாயிருப்பதால் அவற்றில் உம்மைப் பொருளில் வரும் வினையெச்சம் வரவில்லை. இக்கல்வெட்டுக்களில் பெயரெச்ச வடிவங்கள் காணப்படுகின்றன. சான்று : பிறந்த, செய்த.

வினைமுற்றுக்கள்

பெயரெச்ச வடிவங்களோடு ஆண்பால் ஒருமையைக் காட்டும் அன் அல்லது உயர்திணைப் பன்மையைக் காட்டும் ஆர் அல்லது ஓர் முதலான பெயர்ப்பதிலி விகுதிகள் சேர்க்கப்படுகின்றன.