பக்கம் எண் :

பட
 

தமிழ் மொழி வரலாறு

71

பட்ட தமிழின் தன்மையை அறிய உதவுகின்றன. மேலும் பழைய வழக்காற்றின் தொடர்ச்சியைச் சுட்டும் விதிகளும் விதிவிலக்குகளும் இவ்வகையில் பெரிதும் உதவக்கூடியன. தொல்காப்பியருக்கு முற்பட்ட காலத் தமிழின் இயல்புகள், தொல்காப்பியத் தமிழின் இயல்புகள், சங்க இலக்கியத்தின் இயல்புகள் ஆகியவற்றை ஒப்பிட்டாராய்ந்து, தொல்காப்பியத்தின் பெரும் பகுதி சங்க காலத்திற்கு முற்பட்டது என்ற முடிவுக்கு வருகிறோம். முன்னர் ஆராய்ந்த பிராமிக் கல்வெட்டுக்களின் மொழியானது தொல்காப்பியர் காட்டும் மொழியிலிருந்து மாறுபட்டதன்று என்பதையும் தெளியலாம்.

2 உச்சரிப்பு ஒலியியல் ( Articulatory Phonetics)

தட்டுப்பாடுகள்

தமிழ் ஒலிகளின் உச்சரிப்பினை விளக்கத் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்தில் ‘பிறப்பியல்’ என்னும் ஓர் இயல் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ் இயலில் காணப்படும் சில தட்டுப்பாடுகள், பிற்காலத்தில் சில நூற்பாக்கள் சேர்க்கப்பட்டும் கூட, நூல் பழைய முழுமையான வடிவத்தில் நமக்குக் கிடைக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன. தொல்காப்பியப் பிறப்பியலின் முதல் நூற்பாவானது பாணினியின் ( Panini) ‘சிச்சாவை’( Siksa) நினைவுபடுத்துவது போலத் தோன்றுகிறது.11 இந் நூற்பாவில் கூறப்படும் பிறப்புறுப்புக்களில் இரண்டான ‘தலை’ நெஞ்சு ஆகியவற்றிலிருந்து பிறக்கும் ஒலிகள்(இவை முறையே நாவளை ஒலிகள், ஒலிப்பிலா ஒலிகள் ஆகியவையாக இருக்கலாம்.) பின்னர் வரும் விளக்கங்களில் இடம்பெறவில்லை, இதிலிருந்து இந்நூற்பா முதலில் பிறப்பியலில் இடம் பெற்றிருக்கவில்லை, பின்னர் சேர்க்கப்பட்டது என்பது புலனாகும். உயிரொலிகள், இடையின யகரம் முதலியவற்றின்


11. தொல்காப்பியம், 83

“உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் பொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல
திறப்படத் தெரியுங் காட்சி யான”.