பக்கம் எண் :

New Page 5
 

தமிழ் மொழி வரலாறு

99

செய்தி உள்ளது.58 இந்நூற்பாவின் பொருள் புதிராக உள்ளது. கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பருங்கல விருத்தியில் மேற்கோளாகக் காட்டப்பெறும் பெயர் சுட்டப்பெறாத ஆசிரியர் ஒருவர், தொல்காப்பியரின் கருத்தைக் கூறுகையில் ‘ஆய்தம் ஓர் எழுத்தன்று; வெறும் குறியீடே (a diacritical mark)’ எனப் பிற்காலத்தவர் கொள்வது போலக் குறிப்பிடுகின்றார்.59 ஆய்தத்தைத் தொடர்ந்து வரும் வெடிப்பொலியை உரசொலியாக உச்சரிக்க வேண்டும் என்பது இவ்விளக்கத்திலிருந்து புலனாகிறது.

குற்றியலுகரத்திற்கான சூழல்

முன்னரே சுட்டிக்காட்டியபடி, குற்றியலுகரத்தில் முடியும் சொற்களின் முதலசை குறுகியதாக இருக்குமாயின் அதைத் தொடர்ந்து இரட்டித்த மெய்யொலி வருதல் வேண்டும். நெடில் மெய்யொலியின் மாற்று வடிவமே. ஆய்தமாதலின், அதை நெடில் உரசொலி என்றே கொள்ள வேண்டும்.

முடிவு - ஒரு நெடில் உரசொலி

நெடில் உரசொலியுடன் உகரம் போன்ற விடுப்பொலி சேர்ந்து ஒரே ஒலியாகிறது. எனவே தான் தொல்காப்பியர் ‘அஃது’ என்பது ஆய்தத்தில் (உரசொலியில்) முடிவதாகக் குறிப்பிடுகிறார்.

இவ்வொலிகள் பற்றிய பொதுவான முடிவு

சார்பு ஒலிகளாகிய ‘குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம்’ ஆகியன ஒலியன்களல்ல. இவை முன்னரே விளக்கப் பெற்ற ஒலியன்களின் ‘இடச்சார்பாக மாறும் மாற்றொலிகளே’( Positional Variants) ஆகும். குற்றியலுகரமும் குற்றியலிகரமும், விடுப்பொலிகளாக இல்லாதபோது உகர உயிரின் மாற்றொலிகளாகும். ஆய்தம் நெடில் வெடிப்பொலியின் மாற்றொலியாகும். குற்றியலுகரமும் குற்றியலிகரமும் மெய்யொலிகளின் கீழ் ஆராயப்பட்டன. ஏனெனில் வரலாற்று முறையில் அவை விடுப்பொலிகளேயாகும். இவை மூன்றும் ‘சார்பெழுத்து’ என்றழைக்கப்படுகின்றன. இக்கால மொழியியல் கலைச்சொல்லை ஆளுவதாயின், இவற்றை ‘மாற்றொலிகள்’ ( Allophones) என்று குறிப்பிட வேண்டும்.


58. தொல்காப்பியம், 40

 

“உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக் குறிப்பெல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலையான”.

59. யாப்பருங்கல விருத்தியுரை, 3 ஆவது நூற்பா உரை.