ஆறுமுகத்தின் ‘தங்கச் சம்பா’ என்ற நாவலும் வட்டார வாழ்வையும்
பேச்சையும் அடிப்படையாகக் கொண்டது.
மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு என்னும் எருதாட்டத்தை
வைத்து, சி. சு. செல்லப்பா ‘வாடிவாசல்’ என்னும் நாவலைத் திறம்பட எழுதியுள்ளார்.
ரகுநாதன் விறுவிறுப்பான நடையில் பொதுவுடைமைக் கருத்துகளை
அமைத்து எழுதிய ‘பஞ்சும் பசியும்’ என்ற நாவல் ஒரு புதுமையான படைப்பு. நீல. பத்மநாபன்
மூன்று தலைமுறைகளின் வாழ்வை ஓவியமாக்கிக் காட்டும் ‘தலைமுறைகள்’ என்ற நாவல் அமைப்பிலும்
நடையிலும் புதுமை உடையது. வாழ்க்கை நிலைகள் எவ்வளவு வேகமாக மாறிவந்துள்ளன என்பதை
அந்த நாவல் காட்டுகிறது.
நா. பார்த்தசாரதி சுவையும் கருத்தும் சிறந்து விளங்கும்
நாவல்களும் சிறுகதைகளும் கட்டுரைகளும் ஆகப் பலவகை இலக்கியம் அளித்தவர். ‘குறிஞ்சி
மலர்’, ‘பொன்விலங்கு’ ஆகிய நாவல்கள் இங்குக் குறிப்பிடத்தக்கவை. தமக்கென்று
ஒரு கவர்ச்சியான நடையும் கட்டுக்கோப்பும் அமைத்துக்கொண்டு கற்பனைப் பரபரப்புடன்
இலக்கியத் தொண்டு ஆற்றுபவர் அவர். தமிழ் இலக்கியத்தின் பழமையான பண்பாட்டை
மறவாமல் அதை அடிப்படையாகக் கொண்டு அவர் புதுமைகள் பல படைத்து வருகிறார்.
கிராம மக்கள் தம் நிலத்தின் எவ்வளவு பற்றும்
பாசமும் வைத்துள்ளனர் என்பதைச் சங்கரராம் எழுதிய ‘மண்ணாசை’ எடுத்துரைக்கிறது.
ஆர்வி சுவையாகக் கற்பனைகளை அளிப்பவர். ‘அணையா விளக்கு’
என்னும் அவருடைய நாவலில் சமூகச் சீர்திருத்தப் போக்கு உள்ளது. ‘செங்கமலவல்லி’
என்னும் அவருடைய சிறுகதைத் தொகுப்பைப் போலவே, இதுவும் எளிய நடையில் அமைந்தது.
நாவல்களும்
இதழ் ஆசிரியர்களும்
முன்பெல்லாம் படித்தவர் சிலராகவே இருந்தனர். அந்தச்
சிலரும் எதையும் ஆழ்ந்து படிப்பவராக இருந்தனர். இப்போது படித்தவர் தொகை பல மடங்கு
பெருகி வருகிறது. அந்தப் பலர்க்குள் பெரும்பாலோர் ஆழம் இல்லாமல் மேற்போக்காகப்
படிப்பவர்களே. முன்பு, ஒரு நூல் எழுதப்பட்டால் படித்தவர்கள் அதைப் பாராட்ட வேண்டும்
என்ற கவலை நூலாசிரியர்களுக்கு இருந்தது. அவர்களின் பாராட்டை எதிர்பார்த்த கவலை
இருந்தபடியால், அந்தக் கவலையோடு பொறுப்பு உணர்ந்து எழுதினார்கள். இப்போதும் அவ்வாறு
பொறுப்பு உணர்ந்து எழுதுகிறவர்கள் சிலர்
|