பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 295 -

இருக்கிறார்கள். ஆனால் பலர் அவ்வாறு எழுதுவதில்லை; அவ்வாறு உணர்ந்து எழுதவேண்டிய கவலையும் அவர்களுக்கு இல்லை. படித்தவர் தொகை பெருகிவிட்ட இக்காலத்தில், ஆழ்ந்த சிந்தனை இல்லாமல் மேற்போக்காகப் படிக்கும் வெள்ளம் போன்ற கூட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியாரின் ஆதரவு நமக்குக் கிடைத்தால் போதும் என்று அந்த எழுத்தாளர்கள் எண்ணுகிறார்கள். அந்த ஒரு பகுதியாரின் பாராட்டும் பணமும் தமக்குக் கிடைப்பதைக் கொண்டே அவர்கள் முன்னேற முடிகிறது; மேலும் மேலும் அவர்களின் ஆழம் இல்லாத - பண்படாத - சுவைக்கு ஏற்ற உணவை நூல்களில் தந்து எழுத்துலகத்தில் வளர்ச்சி பெற முடிகிறது. பலர் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் யார் என்று ஆராய்ந்து இதழ்களின் ஆசிரியர்கள் தேடுகிறார்களே அல்லாமல், நடுநிலையாகவும் தரமாகவும் எழுதுகிற எழுத்தாளர் யார் என்று தேடுவதில்லை. ஆகவே, பத்திரிகையுலகத்திலும், முன்கூறிய எழுத்தாளர்கள் செல்வாக்குப் பெற முடிகிறது. அவர்களின் வெற்றிக்கு உரிய காரணம் இதுதான் என்று மற்றவர்கள் உணர்ந்து பின்பற்றுகிறார்கள். வாழ்க்கையில் எழுத்தாளர்களுக்கு ஏமாற்றம் மிகுதி; நிலையான வருவாய் இல்லாத காரணத்தால் வறுமையின் தாக்குதலும் மிகுதி. ஏமாற்றத்தாலும் வறுமையாலும் வாடிய எழுத்தாளர்கள், எப்படியாவது பணம் வந்தால் போதும் என்ற துணிச்சலான மனநிலை வந்தபோது, கவலை இல்லாமல் ஏமாந்த மக்களை ஏய்த்து மயங்கும் போக்கை நேரே நாடுகிறார்கள். எதையாவது எப்படியாவது எழுதுவது என்ற பான்மையில் கதை நூல்கள் சில வெளிவருவதற்கு இதுதான் காரணம். அவர்களிலும் கலையுள்ளம் பெற்றவர் சிலர் உண்டு. பண நோக்கத்திற்காக அவசரத்தில் படைக்கப்பட்ட எழுத்துகளில் சில, கலைவடிவம் பெற்றுவிடுதல் உண்டு. முதலில் எப்படியாவது பத்திரிகையுலகில் இடம் பெறவேண்டும் என்று முயன்று எழுதிப் புகழ் பெற்ற எழுத்தாளர் சிலர், புகழ் வளர்ந்தபின் பழைய தவறான முறையைக் கைவிட்டுப் பண்பட்ட - சிந்தனை வளம் உள்ள - படைப்புகளைத் தந்து நல்ல எழுத்தாளர்களாய் விளங்குவதும் உண்டு. அவர்கள் பிறகு கவர்ச்சியைப் பொருட்படுத்தாமல் கலைத் தரத்தையே பெரிதாகக் கொண்டு தம் போக்கை மாற்றிக்கொள்கிறார்கள். அவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.

சிறுகதையின் தோற்றம்

கதை மனித சமுதாயத்திற்கு மிகப் பழமையான சொத்து; பழந்தமிழர்க்கும் கதைச் செல்வம் உண்டு. காவியங்களில் நீண்ட பாட்டுகளில் கதைகளை அமைத்துவந்தனர். நாவல்களும் சிறு கதைகளுமாகிய இக்காலப்