புதிய இலக்கிய
வடிவங்கள் இருந்ததில்லையாயினும் கதைகள் பல இருந்தன. கதைகளில் பெரிய கதைகளும் இருந்தன;
சிறிய கதைகளும் இருந்தன. சிறிய கதைகள் சில, பழந் தமிழ்க் காப்பியங்களின் இடையிடையே
காணப்படுகின்றன. சமய வளர்ச்சி மிகுந்த இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் புராணங்களிலும்
அவை காணப்படுகின்றன. ஆனால் சிறிய கதைகளின் தொகுப்பாகவே அமைந்த தனி நூல்கள்
பழங்காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. அந்தக் கதைகள் குடும்பச் செல்வங்களாக
வழிவழியாகச் சொல்லப்பட்டு, வாய்மொழி இலக்கியமாக - மக்களின் வாய்வழியே வழங்கிய
இலக்கியச் செல்வங்களாக - இருந்திருக்க வேண்டும். வீரமாமுனிவர் (Rev. Beschi)
என்ற இத்தாலிய நாட்டுப் பாதிரியார் தமிழ் கற்றுத் தேர்ந்து நூல்கள் எழுதிய காலத்தில்,
மேற்கு நாட்டு உரைநடைக் கதைகள் போல் தமிழிலும் இயற்றவேண்டும் என முயன்றார். ‘பரமார்த்த
குரு கதை’ என்ற தொகுப்பு அத்தகைய சிறிய கதைகள் கொண்டது. ‘விநோதரசமஞ்சரி’,
‘கதா சிந்தாமணி’ என்னும் நூல்களும் சின்ன கதைகளின் தொகுப்புகள் ஆகும்.
அவற்றில் சுவை மிகுந்த கதைகள் உள்ளன. ஆயினும் அவை எல்லாம் அளவால் சிறிய கதைகளே
அல்லாமல், இன்று சிறுகதை என்று தனி இலக்கியமாக விளங்கும் வகையைச் சார்ந்தவை அல்ல.
சிறுகதை என்னும் தனி இலக்கிய வகையில் தமிழில் கதைகள் அமைந்தது இந்த நூற்றாண்டின்
தொடக்கத்தில் ஆகும்.
வ.
வே. சு. ஐயர்
கோகோல்,
எட்கார் ஆலன் போ, ஓ ஹென்றி முதலான பிற நாட்டாரின் சிறுகதைகளை ஒட்டித் தமிழில்
அந்த இலக்கிய வகை வளர வேண்டும் என்று ஆசை கொண்டவர் வ. வே. சு. ஐயர் என்பவர்.
அவர் தேச விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு உழைத்த உழைப்புக்கு இடையே தமிழ் இலக்கியத்
தொண்டும் செய்த தமிழறிஞர். சுப்பிரமணிய பாரதியாரும் தமிழுக்குச் சிறுகதைச் செல்வத்தை
ஆக்கித் தரவேண்டும் என்று ஆசை கொண்டார். வங்காளக் கவிஞர் ரவீந்திரநாத தாகூரின்
சிறுகதைகள் பதினொன்றை அந்தக் காலத்தில் தமிழில் மொழி பெயர்த்துத் தந்ததோடு
அமையாமல், தாமே சில சிறுகதைகளையும் படைத்துத் தந்தார். ஆறில் ஒரு பங்கு, பூலோக
ரம்பை கதை முதலான கதைகளை இயற்றினார். நவதந்திரக் கதைகள், கதைக்கொத்து என்பவை
அவருடைய கதைகளின் தொகுப்புகள். சிறுகதையின் கலைவடிவம் அவற்றில் செறிவாக அமையவில்லை.
பாரதியார் சிறுகதை இலக்கணம்பற்றிக் கவலையும் கொள்ளவில்லை.
|