வ. வே. சு.
ஐயரே முதல்முதலாகச் சிறுகதைக்கு உரிய கலைவடிவத்தைப் போற்றி, சிறந்த கலைப் படைப்புகளைத்
தமிழுக்குத் தந்தவர். ‘மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்’
என்ற தலைப்பில் அவர் படைத்த சிறுகதைகள் தொகுத்து அளிக்கப்பட்டன. தாகூரின் காபூலிவாலா
என்னும் அழகிய சிறுகதையையும் அவர் தமிழில் மொழிபெயர்த்துத் தந்தார். ‘குளத்தங்கரை
அரசமரம் சொன்ன கதை’ என்னும் அவருடைய சிறுகதை நெஞ்சை உருக்கும் துயரக் கதையாகும்.
ஒரு நங்கை தன் கணவனின் மனம் உணராமல், அவன் வேறொருத்தியை மணந்துகொண்டு வாழச்
சென்றதாகத் தவறாக எண்ணித் துன்புற்று வருந்தித் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிகழ்ச்சி
அந்தக் கதையில் தீட்டப்படுகிறது.
சிறுகதை
என்ற இந்தப் புதிய இலக்கிய வகையை வ. வே. சு. ஐயர் தமிழர்க்கு அறிமுகப்படுத்துவதற்குமுன்
இருந்த பலவகைச் சின்ன கதைகள் சிறுகதைகள் அல்ல; அளவிலே சிறியனவாக இருந்த கதைகளே.
அவை ஒருவன் அல்லது ஒருத்தி பிறந்தது முதல் செய்த செயல்களை எல்லாம் முறையாகச் சொல்லி,
மங்கலமான முடிவைச் சொல்லி, வாழ்க்கை வரலாறுபோல் அமைந்தவை. எங்கேனும் தொடங்கி
ஒரு நிகழ்ச்சி அல்லது ஒருவர் பண்பு அல்லது ஒரு கருத்து அல்லது ஓர் உணர்ச்சி என்ற ஏதேனும்
ஒன்றைமட்டும் ஒருமுக நோக்குடன் தெளிவாகக் காட்டி முடியும் முடிபு அந்தப் பழங்கதைகளில்
இல்லை. ஐரோப்பிய மொழிகளில் அவ்வாறு ஒரு கல் பதித்து ஒளி வீசும் பதக்கம்போல்
விளங்கிய சிறுகதை என்னும் இலக்கிய வடிவைப் போற்றித் தமிழில் இயற்றும் முயற்சி
இந்நூற்றாண்டில் வளர்ந்ததே ஆகும்.
புதுமைப்பித்தன்
சொ.
விருத்தாசலம் என்பவர் புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்டு சிறுகதைகள் பற்பல
எழுதினார். அவர் மேற்கொண்ட புனைபெயர் அவர்க்கு முற்றிலும் பொருந்தும் என அந்தச்
சிறுகதைகள் விளக்கிவிட்டன. இலக்கியத் துறையில் அவர்க்கு இருந்த புதுமையார்வமும்,
படைப்புக் கலையில் அவர்க்கு இருந்த பித்தும் பாராட்டத்தக்கவை. புதிய கருக்கள்,
அவற்றிற்குப் புதிய வடிவங்கள், அவற்றை எழுதுவதற்கு மேற்கொண்ட புதுப் புது உத்திகள்,
புதுவகையான நடை, சமுதாயச் சுகவாசிகளைக் கண்டு ஏங்கிக் கலங்கும் இரக்க நெஞ்சம் இவை
எல்லாம் அவருடைய சிறுகதைகளுக்குப் புத்தொளி ஊட்டின.
வழக்கு
இழந்த பழைய தமிழ்ச் சொற்களை விலக்கி, வழக்கில் உள்ள சொற்களைக் கையாண்டு,
தமிழ் நடைக்குப் புதிய விறுவிறுப்பைத் தந்தார் புதுமைப்பித்தன். தன்னம்பிக்கை மிகுந்தவர்
அவர். தாம் காணும் காட்சிகளையும் தாம் கருதும் கருத்துகளையும் சிறுகதைகள் வாயிலாகவே
|