பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 298 -

தமிழர்க்கு உணர்த்திவிட முடியும் என்று நம்பினார். அவர் நம்பியவாறே செய்து காட்டினார். நகைச்சுவையும் நையாண்டியும் அவர்க்கு குற்றேவல் செய்தன என்று சொல்லத்தக்கவாறு, அவருடைய கதைகளில் இயல்பாக வந்து அமைந்தன. சமுதாயத்தோடு உறவு கொள்வதற்கும் சமுதாயத்தோடு மோதிப் போராடுவதற்கும் இருவகையிலும் அவருக்குச் சிறுகதை என்ற கருவியே பயன்பட்டது எனலாம். தம் வெறுப்பைக் காட்டிப் பிறரைத் தாக்குவதற்கு அவர் பயன்படுத்திய கருவிகளாகவும் சிறுகதைகள் பயன்பட்டன.

‘ஆண்மை’ என்னும் கதையில் சீமாவும் ருக்குவும் சிறுவன் சிறுமியாக இருக்கும்போதே கணவன் மனைவியாக ஆக்கப்படுகிறார்கள். சீர்வரிசை காரணமாக இரண்டு குடும்பங்களும் மோதுகின்றன. ருக்கு தாய் வீட்டில் வாழ்கிறாள். வயது அடைகிறாள். சீமா அங்கே சென்று பெற்றோர் அறியாமல் அவளோடு பழகுகிறான். அவள் கர்ப்பமாகிறாள். ஊர் சிரிக்கிறது. அப்பாவுக்கு அடக்கமான பிள்ளையாய் வாழ்ந்த சீமா செயலற்றுக் கிடக்கிறான். அவள் அவமானம் தாங்காமல் சென்னைக்குப் போய்விடுகிறாள்; அங்கே பைத்தியம் பிடித்து புலம்புகிறாள். எதிர்பாராமல் சீமா அவளைப் பார்க்கிறான். தன் மனைவி என்று அழைத்துக்கொள்கிறான். ‘ஆண்மை’ அதுதான் என்று போற்றுவதுபோல் கதையை முடிக்கிறார்.

‘கல்யாணி’யில் வரும் கல்யாணி இரண்டாம் மனைவியாக வாழ்க்கைப்படுகிறாள். வாழ்க்கை இன்பம் தரவில்லை. இன்னொருவன்மீது மனம் செல்கிறது. அவனும் காதல் கொள்கிறான். ‘என்னுடன் வந்திடு’ என அழைக்கிறான். அவள் தயங்குகிறாள்; குழம்புகிறாள். கடைசியில் ‘வரமுடியாது’ என உறுதியாகச் சொல்லிவிடுகிறாள். அவன் ஊரைவிட்டே வெளியேறுகிறான்.

இவ்வாறு பலவகை வாழ்க்கைச் சித்திரங்களைத் தாம் கண்டவாறோ, உணர்ந்தவாறோ எழுதிய கலைஞர் அவர்.

வாழ்க்கையின் பல கோணங்களை உள்ளவாறு உணர்ந்து கண்ட அவர், வெறுங் கனவு போன்ற கற்பனைகளில் மூழ்கிக் கிடக்காமல், தாம் கண்ட வாழ்க்கைக் கோணங்களைக் கண்டவாறே எடுத்துரைத்து, அவைபற்றித் தாம் உணர்ந்தவற்றையும் சேர்த்துச் சொல்லி அருமையான சிறுகதைகள் ஆக்கிவிடுகிறார். கதைகளில் கிண்டலும் நையாண்டியும் நிரம்பியிருக்கும். ஆனால் அவை எல்லாம் அவர் வாழ்ந்த சுற்றுப்புறத்தைப் பார்த்து அவர் செய்த கிண்டல்களே; அவர்களை எள்ளி நகையாடிய ஏச்சுகளே. ஆனாலும் இப்படித்தான் வாழ்க்கை இருக்க வேண்டும் என்றோ, இன்ன நோக்கங்களைக் கதைகளில் எடுத்துரைக்க வேண்டும் என்றோ, அவர் எந்த வரையரையும் செய்துகொள்ளவில்லை. அவ்வப்போது என்ன என்ன