பக்கம் எண் :

Tamil Ilakiya Varalaru
பக்கம் எண்: - 299 -

கண்டு எவ்வாறு உணர்ந்தாரோ அவற்றை அவ்வவ்வாறே தந்து சுவையூட்டும் திறமை அவருக்கு இருந்தது. அவருடைய உள்ளம் இயல்பான கலையுள்ளம். ஆகவே, அந்த உள்ளத்தில் பதிந்து வெளிவந்த காட்சிகள், கருத்துகள் எல்லாமே கலைவடிவுடன் அழகான கதைகளாக வெளிவந்தன எனலாம்.

‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’ என்பது ஒரு கதை. அதில் புராணங்கள் கற்பனை செய்வதுபோல், கடவுளை மண்ணுலகத்திற்கு வரச் செய்கிறார். அவர் மண்ணுலகில் அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்து வருகிறார். எல்லாரிடத்திலும் பழகியும் பயன் இல்லை; எல்லாரும் கேலி செய்யும் நிலைமையே ஏற்படுகிறது. தம் தொழிலைக் கொண்டு இந்த உலகத்தில் வாழ முடியாது என்று கடவுள் உணர்ந்துகொள்கிறாராம். ‘எட்டி நின்று வரம் கொடுக்கலாம். உங்களோடு இருந்து வாழ முடியாது’ என்று சொல்லிவிட்டு விண்ணுலகத்திற்கே திரும்பிப் போய்விடுகிறாராம். நகைச்சுவை நிறைந்த கதை இது. இவ்வாறே வேதாளம், மூட்டைப்பூச்சி, கட்டில் முதலியவற்றையும் பேசுவதாகக் கற்பனை செய்து கதை எழுதியுள்ளார். ஆயினும், பெரும்பாலான கதைகள் வாழ்வில் கண்டவற்றை அமைத்து எழுதப்பட்டவைகளே; நடப்பியல் என்னும் அடிப்படையில் அமைந்தவைகளே.

தமிழில் சிறுகதைத் தந்தை என்ற புகழுக்கு உரியவர் அவர். சிறுகதை வளர்த்த இதழாகிய ‘மணிக்கொடி’ தொடங்கிய காலம் 1933. அக்காலத்திலேயே சிறந்த சிறுகதை ஆசிரியராக விளங்கினார். அவருடைய சிறுகதைகளில் வறுமையின் விளைவான இன்னல்களும் இடம்பெறும்; பலவகைச் சமூகச் சிக்கல்களும் விளக்கப்படும்; மக்களின் மூடநம்பிக்கைகளும் சாடப்படும். பக்த குசேலா, விநாயக சதுர்த்தி முதலான சிறுகதைகள் புராணக் கதைகளோ என்று எண்ணத்தக்கவாறு தலைப்புகள் பெற்றிருக்கும். துன்பக்கேணி, நாசகாரக் கும்பல், மனித யந்திரம், பொன்னகரம், மிஷின் யுகம் முதலிய சிறுகதைகளின் தலைப்புகள் இக்காலத்தை ஒட்டியவை; பொருளும் இக்காலச் சிக்கல்களை ஒட்டியவை. 1941-க்கு முன் ‘அகல்யை’ பற்றி ஒரு கதை எழுதிக் கற்பனையைக் கலக்கிப் புரட்சி செய்தார். பிறகு அதே அகல்யைபற்றிச் ‘சாப விமோசனம்’ என்ற கதை எழுதி வேறுவகைப் புரட்சியைச் செய்தார். முன்னதில், மனத் தூய்மைதான் கற்பு, உடல் தூய்மை இழப்பது பெரிது ஆகாது என்று கௌதம முனிவர் ஆறுதல் அடைகிறார். இந்திரனை மன்னிக்கும் சான்றோர் ஆகிறார். பின்னதில், சாபத்துக்கு விமோசனம் கிடைத்தபோதிலும் பாவத்துக்கு விமோசனம் இல்லையே என்று அகல்யை மறுபடியும் கல் ஆகிறாள்;